• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சீமான் வலியுறுத்தல்

கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சீமான் வலியுறுத்தல்

சீமான்

சீமான்

போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் : சீமான்

 • Share this:
  கரூரில் பாலியல் தொந்தரவால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

  கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருகிறது. அரும்பாக மலரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன். எதுவும் செய்யவியலா கையறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரும் அவல நிலையும் கண்டு உள்ளம் குமுறுகிறேன்; அறவுணர்ச்சியும், நீதியும் சாகடிக்கப்பட்டு பிஞ்சுகளின் உயிரைக்குடிக்கும் இக்குற்றச்சமூகத்தில் அங்கம் வகிப்பதற்கு குற்றவுணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறேன். பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக நேரும் இக்கொடுமைகள் அவர்களது எதிர்காலம், பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.

  ஆகவே, இவ்விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீரியக் கவனமெடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக தீவிரமான சட்டநடவடிக்கைகளை எடுக்கத் துணிய வேண்டும் எனவும், தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

  கரூரில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது மாணவி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் 'பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசிப்பெண் நானாகத்தான் இருக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெங்கமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதனை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் ஏற்காத நிலையில், தற்போது அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Musthak
  First published: