உலக மாற்றுத்திறனாளி தடகளப் போட்டிக்கு தேர்ச்சி பெற்ற 4 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு- முதல்வர் தலையிட வீரரின் தந்தை வேண்டுகோள்

மாற்றுத்திறனாளி வீரர்

தேசிய அளவில் 3 முறை தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவன். வரும் 23ம் முதல் 28ஆம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறும் 4வது உலக மாற்றுத்திறனாளி தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றும், மத்திய அரசு, மகனை அழைத்துச் செல்லவில்லை என கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி கிராமத்தில் பிறந்தவர் கார்த்தி(25). தந்தை சரவணன்(50), தாய் விஜயா (46), சகோதரி சந்தியா (27). தந்தை கூலி வேலை செய்து வருகிறார். தனது மகனை பெரிய சாதனையாளராக மாற்ற வேண்டும் என்ற லட்சிய கனவு கொண்டவர். கார்த்திக்கு சிறு வயது முதலே காது கேட்காது, வாய்பேச முடியாது. ஆனாலும் கார்த்தியின் திறமைக்கு கடவுள் எவ்வித குறையும் வைக்கவில்லை. பள்ளி பருவத்திலிருந்தே விளையாட்டு, எழுத்து மற்றும் ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

மேலும் கார்த்தி படிப்பதைக் காட்டிலும் விளையாட்டில் அதிக ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். தனக்கு இருக்கும் குறைபாட்டினைக் கடந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் உலக அளவில் உச்சத்தை தொட்டால் மட்டுமே, நான் ஒரு மாற்றுத்திறனாளி என நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனதிலிருக்கும், எண்ணத்தை களைந்தெறிய முடியும் என்ற சிறு நெருப்புப்பொறியை தன் மனதில் விதைத்துக் கொண்டார். அதன் விளைவு தான் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும், முதல் இடத்தை பெற்று வந்தார். அதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர்களின் முயற்சியால் இவருக்கு உயரம் தாண்டுதல், போல்வால்ட் மற்றும் தடை தாண்டுதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் பொதுப்பிரிவில் 50 போட்டிகளுக்கும் மேலாக பல்வேறு பதக்கங்களை மாவட்ட அளவில் குவித்தார். மேலும் 2017 ஆண்டு மாநில அளவில் காது கேளாதோர் உயரம் தாண்டும் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில் தேசிய அளவிலான காதுகேளாதோர் உயரம் தாண்டும் போட்டியில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் 2017 ஆம் ஆண்டு சர்வதேச காது கேளாதோர் டெஃப் ஒலிம்பிக் போட்டி, துருக்கி நாட்டில் இந்தியாவிற்காக விளையாடியவர். அப்போட்டியில் 1.82 மீட்டர் உயரம் தாண்டி 8 வது இடத்தை பிடிந்தார்.

இந்நிலையில், சாதாரணமான விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அளவில் பதக்கம் வென்று, இந்தியாவிற்காக விளையாடிய வீரர்களுக்கு கிடைக்கப்பெறும் 5 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் உரிய அங்கீகாரத்தை கார்த்திக்குக்கும், மற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் வழங்கவேண்டும் என தந்தை சரவணன் 2017ம் ஆண்டு முதல், முதல்வரின் தனி பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியர் பிரிவிற்கு என பல்வேறு மனுக்களை கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என வருந்தினார்.

போலந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது உலக மாற்றுத்திறனாளி தடகள போட்டிக்கு கடந்த மாதம் ஜூலை - 22ஆம் தேதி டெல்லியில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் கார்த்திக் சென்று குறைந்தபட்ச அளவான 1.80 மீட்டர் உயரம் தாண்டுதலில், 1.83 என்ற அளவிற்கு உயரம் தாண்டி தேர்ச்சி பெற்றார். கார்த்தியின் பெயர் இந்திய காது கேளாதோர் தடகள விளையாட்டு ஆணையம் தேர்வு பட்டியலிலும் இடம் பெற்றது.

மேலும் இவருடன் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் போன்ற பிரிவுகளில் மொத்தம் 4 பேர் தேர்வு ஆகியும் 4வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு இவர்களை அழைத்துச் செல்லவில்லை. இதுகுறித்து இந்திய காது கேளாதோர் தடகள விளையாட்டு ஆணையம் எவ்வித காரணங்களும் குறிப்பிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாதம் 23 முதல் 28ம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது உலக மாற்றுத்திறனாளி தடகள போட்டியில் கார்த்திக் உட்பட தமிழ்நாட்டு வீரர்கள் 4 பேருக்கு வாய்ப்புகள் ஏன் மறுக்கப்படுகின்றது என கேள்வி எழுகின்றது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மத்திய அரசையும், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: கார்த்திகேயம், கரூர்.
Published by:Karthick S
First published: