அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 பணம் நாங்கள் கொடுத்தோம். தற்போதைய திமுக ஆட்சியில் நயாபைசா கொடுக்க வக்கற்ற அரசாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்.
கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சிகள், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க தான்.எம்.ஜி.ஆர் -10 ஆண்டுகள்,அம்மா - 16 ஆண்டுகள்,எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் என 30 ஆண்டுகள் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து சிறப்பாக ஆட்சி செய்தோம்.
Also Read: பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு, உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கல்வி கற்போர்களின் சதவிகிதம் தேசிய அளவில் 22 சதவீதமாக இருந்தது. புரட்சித்தலைவி அம்மாவின் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பல சலுகைகள் இலவசங்களை அறிவித்து மாணவர்கள் பட்டதாரிகள் வரை படித்து முடித்த வகையில் தேசிய அளவில் 52 சதவீதமாக தமிழகம் உயர்ந்து சாதனை படைத்தது. தமிழக விவசாயிகளின் நீராதார பிரச்னையான காவிரி நீர் பிரச்னையில் 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையை தமிழகம் கர்நாடகாவில் நதிநீர் பங்கீடு குறித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி, போராடி அம்மா ஆட்சி காலத்தில் வெற்றி பெற்று அரசின் கெஜட்டில் வெளியிட்டு சாதனை படைத்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்தது அ.தி.மு.க ஆட்சி.
நீட் தேர்வு முதன் முதலில் கொண்டு வந்தது தி.மு.க காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். தற்போது நீட் தேர்வை ரத்து செயவோம் என நாடகம் நடத்துகின்றனர். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனே ரத்து செய்ய ரகசியம் வைத்துள்ளதாக சொன்னவர். ஆட்சிக்கு வந்த பின் ஏன் ரத்து செய்யவில்லை.கடைசி வரை நீட் ரகசியம் ரகசியம் தான். செந்தில்பாலாஜி 10 மாதம் ஆட்சியில் என்ன செய்தார் என்று கரூர் மக்களாகிய உங்களுக்கு தெரியும்.செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்து கொண்டு கரூரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் தான் அவர் எனக் குற்றம் சாட்டினார்.
Also Read: ஜூஸ்.. தேநீர் போட்டு ‘ஓட்டு’ கேட்கும் திமுக எம்.எல்.ஏ - நூதன பிரச்சாரம்
மேலும், செந்தில்பாலாஜியை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அழகுபார்த்த கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்.எம்.ஜி.ஆர், அம்மாவிற்கு துரோகம் செய்தால் கண்டிப்பாக அதற்கு உண்டான பலன்களை அனுபவிப்பார்கள் என செந்தில்பாலாஜி சாடினார்.
10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக இருந்தது. ஆனால் 10 மாத காலத்திலேயே தி.மு.க-வின் அரசு எப்படி இருக்குதென்று அனைவருக்கும் தெரியும்.நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்று. தி.மு.க-வை படு தோல்வியடையச் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு சம உரிமை என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடங்களில் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் ஆண்களை விட பெண்களே 100% ஆட்சி செய்யும் நிலை வந்தாலும் வரும். உங்களை அம்மா மேலிருந்து என்றும் ஆசிர்வதிப்பார்.” என்று பேசினார். இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி என கட்சித் தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்) உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.