கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 12 வார்டுகள் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 வார்டு , சுயேட்சை - 1 வார்டு, பிஜேபி- 1 வார்டு வெற்றி பெற்றிருந்தது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுக உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருந்தனர். இதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ள திமுக உறுப்பினர்கள் அவர்கள் ஏற்றுள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து 08.03.2022 அன்று புலியூர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று இருந்த திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் கலாராணிக்கு முன்மொழிய உறுப்பினர்கள் யாரும் முன்மொழியாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி சிபிஐக்கு ஒதுக்கப்பட்டருந்தது. புலியூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 12, இந்திய கம்யூனிஸ்ட் 1, பாஜக 1, சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதால், திமுக தலைமை புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.ஆனால், திமுகவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை முன்மொழியவில்லை. இதனால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.