நியூஸ் 18 செய்தி எதிரொலி : அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுத்தது தமிழக அரசு
நியூஸ் 18 செய்தி எதிரொலி : அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுத்தது தமிழக அரசு
கரூர் அங்கன்வாடி மையம்
Karur: நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் எதிரொலியாக இன்று உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
கரூர் அருகே மகிளிப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மின் இணைப்பு, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் தவித்து வந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியின் எதிரொலியாக இன்று உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி ஊராட்சி, மகிளிப்பட்டியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 2014-15ஆம் ஆண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக மின் இணைப்பு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வந்தது. பெற்றோர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேட்கும்பொழுது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திடம் செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திலோ கிராம ஊராட்சி மன்றம் தான் செய்து தரவேண்டும் என்று இருவரும் ஒருவரையொருவர் மாற்றி அலைக்கழித்து வந்தனர்.
இதனால் 50க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவதிப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதுகுறித்த செய்தி கடந்த 10ஆம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,கரூர் மாவட்ட மின் பகிர்மான கழகம் மற்றும் மாயனூர் மின் பகிர்மான கோட்டம் சார்பில் இன்று அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மாயனூர் மின் பகிர்மான கழக கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்கினர்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர் (கரூர்)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.