Home /News /tamil-nadu /

கரூரில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக சுயேட்சைகளை களமிறக்கிய திமுக..

கரூரில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக சுயேட்சைகளை களமிறக்கிய திமுக..

கரூர் திமுக கூட்டணி குழப்பம்

கரூர் திமுக கூட்டணி குழப்பம்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவினர் யாரும் வரவில்லை.  பின்னர், வேறு பகுதியில் இருந்து டெம்போவில் ஆட்களை அழைத்து வந்து அந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக எம்பி.ஜோதிமணி வாக்கு சேகரித்தார்.

    கரூரில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக திமுக சுயேட்சை வேட்பாளர்களை மறைமுகமாக நிறுத்தி இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் திமுகவினர் ஆதரவு இல்லாததால் வெளியே இருந்து ஆட்களை  வரவழைத்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து எம்பி. ஜோதிமணி  பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ம.திமு.க., இ.கம்யூ., கட்சிகள் போட்டியிலிருந்து விலகியதால், அந்த வார்டுகளில் தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறங்கி, அவர்களுக்கும் திமுக அதிர்ச்சி அளித்து வருகிறது.

    இது குறித்த, தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
    கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதோடு நிறுத்தி கொள்ளாமல், அதில், யார் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. நிர்பந்தம் செய்தால் பிரச்னை ஏற்பட்டது. இதனால், தி.மு.க., வி.சி.க., கூட்டணி உடைந்து, 11வது வார்டில் நேரடியாக மோதுகின்றன.

    இதேபோல், 12-வது வார்ட்டில் காங்கிரஸ் கட்சியின் கிருத்திகாவுக்கு எதிராக, அந்த கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி மனைவி மஞ்சுளா, 16வது வார்ட்டில் காங்கிரஸின் பெரியசாமிக்கு எதிராக, தி.மு.க., மாணவரணி தெற்கு நகர துணை அமைப்பாளர் பூபதி, 41வது வார்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டபாணி எதிராக தி.மு.க.வை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

    இதையும் படிங்க: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகம் சீரழிந்திருக்கும்.. திருமாவளவன் விமர்சனம்


    மாவட்ட தி.மு.க., ஆசியுடன், இந்த வேட்பாளர்கள் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வேலை செய்யாமல், மாவட்ட தி.மு.க. உத்தரவு பேரில், இந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு, அக்கட்சினர் பணி செய்து வருகின்றனர். அந்த சுயேச்சைகள் பணிமனைகளில் உதயசூரியன் வெளிச்சத்தில் வளர்ந்த தென்னை மரத்திற்கு வாக்களியுங்கள் வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், பணிமனைகளில் தி.மு.க., கறைவேட்டிகள் அதிகம் காணப்படுகின்றனர். தேர்தல் பணி மனையில் கூட்டமாக அமர வைத்து சரியான கவனிப்புடன் கூல்ட்ரிங்ஸ், பிரியாணி வழங்கப்படுகிறது.இதற்குமேல், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க: இன்னும் 27 அமாவாசைகளில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை


    தேர்தல் முடிவுக்கு பின், கூட்டணி கட்சியில் கூட தங்கள் ஆதரவு வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பது மாவட்ட திமுகவின் எண்ணமாக உள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் மறுத்ததால், அவர்களுக்கு எதிரான வேலையை தி.மு.க. செய்து வருகிறது. இதனால், தான் ம.தி.மு.க., இ.கம்யூ., கட்சிகள் போட்டியில் இருந்து பின்வாங்கி விட்தோ என தோன்றுவதாக கூட்டணி கட்சிகள் மத்தியில் பேசப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 16 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். அந்த வார்டில் உள்ள திமுகவினர், தென்னைமர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பூபதி என்பவரின் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தனர்.

    காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக வேறு பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஆட்கள்


    இதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவினர் யாரும் வரவில்லை.  பின்னர், வேறு பகுதியில் இருந்து டெம்போவில் ஆட்களை அழைத்து வந்து அந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக எம்பி.ஜோதிமணி வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணிக்குள் நடைபெறும் சர்ச்சைகள் கரூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK Alliance, Jothimani, Karur

    அடுத்த செய்தி