Home /News /tamil-nadu /

ரூ.10,000 கடனுக்கு ரூ.48,000 கந்துவட்டி... அடியாட்களுடன் தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் மீது புகார்

ரூ.10,000 கடனுக்கு ரூ.48,000 கந்துவட்டி... அடியாட்களுடன் தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் மீது புகார்

கந்து வட்டி

கந்து வட்டி

கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தி வந்த கும்பல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியினர் உள்ளதால் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  கரூர் மாவட்டத்தில்  கடனாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து 54 ஆயிரம் ரூபாய் கட்டியும் மீதமுள்ள தொகையை கேட்டு கந்துவட்டு கும்பல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கந்துவட்டி சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக அமைப்புகள் போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

  கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் திமுக பிரமுகர் சரவணன் என்பவரிடம் அதே பகுதியில் வசித்து வந்த கமலநாதன் மனைவி அய்யம்மாள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு பிணையாக வெற்று பத்திரத்தில் கையொப்பமிட்டதாக கூறப்படுகிறது.  ஊரடங்கு காரணமாக  அசல் தொகையை செலுத்த முடியாததால்  அசல் தொகையான 10 ஆயிரம் ரூபாய்க்கு தொடர்ந்து 15 நாளுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் என 48 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

  மேலும் ரொக்க பணத்தில் 6 ஆயிரம் கடந்த மாதம் கொடுத்துள்ளார். மீதி 4 ஆயிரம் மட்டும் வழங்க வேண்டும். இதனிடையே அய்யம்மாள் தனது பிறந்த ஊரான அப்பிபாளையம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயைப் பராமரிப்பதற்காக குடியேறியுள்ளார்.
  செல்லாண்டி பாளையம் பகுதியில் இருந்து அப்பிபாளையம் பகுதிக்கு  பைனான்சியர் சரவணனின் அலுவலக ஊழியர்கள் கடன் தொகையை வசூலித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில்  குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி மாலை கடனை வசூலிக்க அப்பிபாளையம் பகுதிக்கு வந்த சரவணனின் அலுவலக ஊழியர்கள் கமலநாதனிடம்  மிரட்டும் தோணியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதனால் மனவேதனை அடைந்த கமலநாதன் ஏற்கனவே, அசல் தொகைக்கு மேல் 5 மடங்கு வட்டி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தம்


  இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
  அப்பிபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அடாவடி கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சில மணி நேரத்தில் பைனான்சியர்கள் சரவணன், தொழில் கூட்டாளி பிரபு மற்றும் பாரதி, ராஜா உள்ளிட்ட சிலர் அடியாட்களுடன் வந்து கமலநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அவரது மனைவி, இரண்டு மகன்கள் வினோத்குமார், அருண்குமார் என குடும்பத்தாரை கடுமையாக கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  15க்கும் மேற்பட்ட அடியாட்கள் வந்து தாக்கியதால் அருகில் உள்ள பொதுமக்கள் தடுக்க முடியாமல் அலறி ஓடினர். இந்த தாக்குதலில் கமலநாதனுக்கு கால் முறிந்தும், அவர்களது மகன்கள் வினோத்குமார், அருண்குமார் ஆகியோருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.

  மேலும் படிங்க: ஜோடியாக வந்த காதலர்கள்.. தாலியோடு காத்திருந்த இந்து அமைப்பினர்.. திருச்சி மலைக்கோட்டையில் பரபரப்பு


  இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அருண்குமார் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அளித்த புகார் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் புகாரை பெற்று தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு மற்றும் கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பைனான்ஸ் உரிமையாளரும் செல்லாண்டிபாளைம் 46 மாவட்ட கழக திமுக பொறுப்பாளருமான சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும்,  ஆளுங் கட்சி பிரமுகர்கள் என்பதால் இதுவரை இந்த வழக்கில் யாரையும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: வானத்துல வெளிச்சமா ஏதோ போகுது சார்.. மெயில் போட்ட கிருஷ்ணகிரி நபருக்கு இஸ்ரோ அனுப்பிய பதில்


  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படவில்லை என குற்றம் சாட்டினார்.

  இதனிடையே பிப்ரவரி 15ம் தேதி (நாளை) நீதிமன்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புகள் அறிவித்துள்ளன.

   

  இந்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் சரவணிடம் கேட்டபோது,  ‘அவர்கள் குடும்ப செலவிற்காக அப்போ, அப்போ பணம் வாங்குவார்கள். கூடுதலாக 1000, 500 மட்டும் கொடுப்பார்கள். இதுவும் 2.10 சதவீதம் வட்டி என்ற பெயரில் தான் நாங்கள் வசூலித்து வருகிறோம். என் பைனான்ஸில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் அவர்களுக்கும் சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் நான் அங்கு செல்லவில்லை. கந்து வட்டி வசூலிக்கவில்லை. என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக கூறுகின்றனர். நான் வழக்கறிஞர் மூலமாக வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்’ என தெரிவித்தார்.

  சமூக அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு சேர்த்துள்ளனர். ஆனால் இதுவரை ஆன்லைனில் அவர் பெயர் வரவில்லை. இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல்துறையினரிடம் கேட்டபோது அவரது பெயரை வழக்குப்பதிவு புகாரில் சேர்த்துள்ளோம். ஆன்லைன் இதுவரை அப்டேட் செய்யப்பட வில்லை என தெரிவித்தனர்.

  செய்தியாளர்- கார்த்திகேயன் - கரூர்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Crime News, DMK

  அடுத்த செய்தி