கரூரில் சாலை போட்டதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில், 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் 170 கோடி ரூபாய் மதிப்பிற்கு சாலை பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இவர், ஈசநந்தம் - புகழூர் சாலையை போடாமலேயே பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 5ம் தேதி மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் சர்ச்சையை கிளப்பிய சூழலில், கடந்த 8ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது.
இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை சாலை போடும் பணியை நிறுத்தசொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் எம்ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஒப்பந்ததாரரின் டிப்பர் லாரிக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் மீது 7 பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்திருந்தார். ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
Also read... பழமையான கோவிலில் 3 கலசங்கள் திருட்டு.. இரிடியம் கும்பல் கைவரிசை?
இன்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை வரும் நிலையில், நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர்: கார்த்திகேயன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.