நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உணவகம் ஒன்றில் பரோட்டா தயாரித்தும் தெலுங்கில் பேசியும் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் வேட்பாளர்களும், கட்சி பிரமுகர்களும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் மாநகராட்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் பத்மா, கோபிநாத், மஞ்சு, தீபா, குருபிரசாத் ஆகிய வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் தெலுங்கு சமூகத்தினர் வேட்பாளராக இருந்ததால் அப்பகுதியில் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதா? திருமண விழாவில் குவாட்டர் சிக்கன் இலவசம் என அறிவித்த மாப்பிள்ளை வீட்டார்
பின்னர், அப்பகுதியின் கடை தெருவில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, ஓட்டு கொட்டகையிலான சிறிய ஹோட்டலுக்கு சென்ற சுதாகர் ரெட்டி பரோட்டா தயாரித்தார். தொடர்ந்து அதே கடையில் வேட்பாளர்களுடன் அமர்ந்து குஸ்கா, புரோட்டா உணவு அருந்தினார்.
செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.