கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளிடையே இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் கரூர் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒருமையில் பேசி எம்.பி., ஜோதிமணியை வெளியேற சொல்லி கூச்சலிட்டுள்ளனர்.
பேச்சவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக ஜோதிமணி ஆவேசமாக வெளியில் வந்து விருந்திற்கு வந்துள்ளேனா? பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்.
பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசியதை நிருபர்கள் படம் பிடித்த போது திமுகவினர் எடுக்க விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி கட்சி பங்கீடு தொடர்பான கூட்டத்திலிருந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியேறியதை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
கரூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளுடன் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் திமுக மேலிடம் காங்கிரஸ் பங்கீடு குறித்து முடிவு செய்யும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை.
3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. தலைமையிடம் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை.
எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும். கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும் என்று செந்தில்பாலாஜி கூறினார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, DMK, Jothimani, Local Body Election 2022, Senthil Balaji