Home /News /tamil-nadu /

உன் வயிறும் பசியாற தான் போராட வந்துள்ளேன்- கேலி செய்த இன்ஸ்பெக்டருக்கு பதிலடி கொடுத்த விவசாயி

உன் வயிறும் பசியாற தான் போராட வந்துள்ளேன்- கேலி செய்த இன்ஸ்பெக்டருக்கு பதிலடி கொடுத்த விவசாயி

farmer protest karur

farmer protest karur

கரூரில் போராட்டத்தின்போது கேலி செய்த காவல் ஆய்வாளருக்கு முதிய விவசாயி பதிலடிகொடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை பாரத ஸ்டேட் வங்கியில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் மற்றும் பைப்லைன் போடுவதற்கு ரூ.12 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் 2 லட்ச ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 10 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். வாங்கிய 10 லட்ச ரூபாயில் 9 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கட்டியுள்ளார்.

தற்பொழுது, 68 லட்ச ரூபாய் தரவேண்டுமென்று வழக்கு போட்டு பூர்வீக சொத்தான 11.5 ஏக்கர் நிலத்தை 5 வாரிசுகள் இருக்கும் பொழுது அவர்களைக் கேட்காமலே ரூ.58 லட்சத்துக்கு வங்கி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளது.   அதனால் வேதனையடைந்த விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு துண்டிய குளித்தலை எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர்கள் மண்டை ஓட்டை கழுத்தில் தொங்கவிட்டபடி  கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது குளித்தலை டிஎஸ்பி ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு தலைவர் உட்பட  அனைவரையும் போலீசார் கைது செய்து அண்ணா சமுதாய கூடத்தில் அடைத்தனர். பிறகு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 4 பேர் போலீசாருடன் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவை இந்திய பிரதமர் மோடியிடம் கொண்டு சென்று கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக்கொண்டு பிரதமருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ‘நரேந்திரமோடி தேர்தலின் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகள் அடிமைகள் என்றும், நான் பிரதமரானால் விவசாயப் பொருட்களின் விலையை இரு மடங்காக உயர்த்துவேன் என்று கூறியவர் மோடி அதனை செய்யவில்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மோடியின் ஒன்றிய அரசாங்கம், இந்திய நாட்டில் 90 கோடி விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் உள்ளது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தனியார் வங்கிகள் தான் விவசாயிகளை அடியாட்களை வைத்து வஞ்சித்து வந்த நிலையில் தற்போது மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  விவசாயிகளுக்கு ஒத்துவராத சட்டத்தைப் பயன்படுத்தி கடன்பெற்றதற்காக விவசாயிகளுக்கு தெரியாமலே விவசாயிகளின் நிலங்களை ஏலம் விட்டு விவசாயிகளிடம் கொள்ளையடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் மண்டையோடு எலும்புகளுடன் ஊன்றுகோல் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், முதியவரை கையைப் பிடித்து அழைத்துச் சென்று உதவி செய்ய முயன்றார். அப்போது குளித்தலை நகர காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் கிண்டலடித்து இவரே எலும்பும், தோலுமாக உள்ளார். அவர் தடியை ஊன்றிக் கொண்டு கையில் மனித எலும்புக் கூடுகளை எடுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட வருவதா என சிரித்து நக்கல் அடித்தார்.

மேலதிகாரி உத்தரவிட்டதால் வேறு வழியில்லாமல் முதியவரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றபோது,  அந்த முதியவர் உன் வயிறும் பசியாற தான் விவசாயிகளுக்காக போராடுவதற்காக வந்துள்ளேன். எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று முனகியவாறு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Karur

அடுத்த செய்தி