கரூர் மாவட்டத்தில் சுவரில் விளம்பரம் எழுதுவதில் தமிழக அரசியல் கட்சிகளான பாஜக மற்றும் திமுக இடையே தகராறு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் கோட்டாட்சியர் அலுவலகம் சுற்று சுவரில் பாஜக, திமுக கட்சிகள் விளம்பரம் செய்வதற்காக ஒரே இடத்தில் கூடியுள்ளனர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஈடுபட்டபோது, இரு கட்சியினர் இடையே பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து பாஜகவை சேர்ந்த மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சாலையில் இறங்கி திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜகவுக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த மாநகர பொறுப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுகவினர் சாலையில் இறங்கி கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சென்று போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது பாஜக நிர்வாகி ஒருவர் செல்போனை திமுகவினர் பறித்துக் கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் தங்கள் கைகளை நீட்டி போலீசாரை நோக்கி, ‘சார் எங்கயாச்சும் பாஜக மறியலில் ஈடுபட்டால் பிரச்சனை பெரிதாகமாறிவிடும்’ என கூறிவிட்டுச் சென்று கூட்டத்தை கலைத்துள்ளனர். இச்சம்பவத்தால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.