தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதனால், தமிழக அரசியல் களம் நாள்தோறும் புதிய பரபரப்புகளை சந்தித்து வருகின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், கூட்டணிகட்சிக்கு அதரவு என பரபரப்பாகக் காணப்படுகின்றது. அந்த வகையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிமுன் அன்சாரியில் மனிதநேய ஜனநாயக் கட்சி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகின.
இந்த இரண்டு கட்சிகளும் நேற்று தி.மு.கவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று தி.மு.கவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியும் தி.மு.கவுக்கு வழங்கப்பட்ட ஆதரவைத் திரும்பப் பெறுவதாக செய்திகள் வெளிவந்தன. தி.மு.கவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று முக்குலத்தோர் புலிப்படை குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த தமிமுன் அன்சாரி, ‘திமுக கூட்டணியில் தங்களுக்கு தொகுதி ஒதுக்காதது அதிருப்தி. திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா குறித்து நாளை சென்னையில் நடைபெறும் அவசர செயற்குழுவில் முடிவு எடுப்போம். சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியுள்ளது.