முக்குலத்தோர் புலிப்படை தேர்தலில் போட்டியில்லை - அதிமுகவை தோற்கடிக்க சபதம் - கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை தேர்தலில் போட்டியில்லை - அதிமுகவை தோற்கடிக்க சபதம் - கருணாஸ்

கருணாஸ் எம்.எல்.ஏ

முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவ்வப்போது முதல்வர் மற்றும் ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டி வந்த அவர் கடைசி வரை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

    சசிகலாவின் ஆதரவாளராக வலம் வந்த கருணாஸ் இந்தமுறை அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக தெரிவித்த கருணாஸ் ஒரு சில நாட்களில் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக இத்தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை அதிமுக எதிர்ப்பு, உள்ளிட்டவை குறித்து சமூகவலைதளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது.

    அண்ணா திமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்துக்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது. தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும், இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் எனவும் ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என தலைமை கேட்டுக் கொள்கிறது.

    இந்தத் தேர்தலில் திராவிட இயக்கங்களால் அரசியல் அனாதையாக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயம், அதன் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தையும், அரசியலின் தன்மையையும் புரிந்து எதிர்காலத்தில் எவரும் முக்குலத்தோர் அல்லாத அரசியல் நிலையை நினைத்து பார்க்க முடியாதபடி அரசியல் பணியாற்ற முன்வர வேண்டும்.

    இட ஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூகவலைதளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒரு அமைப்பின் அல்லது மனிதனின் வாழ்வில் சுப நிகழ்வுகளில் உடனிருப்பதை விட துக்க நிகழ்வுகளில் கஷ்டகாலத்தில் தோளோடு தோள் கொடுப்பது மட்டுமே வரலாற்றில் பதியப்படும். முக்குலத்தோர் புலிப்படையின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம் என்பதை நிர்வாகிகள், தொண்டர்களான உங்கள் மீது தலைமைக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

    மொத்தத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட முக்குலத்தோர் மக்களின் இழந்த மரியாதையைப் பெற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது முக்குலத்தோர் புலிப்படையின் இலக்கு.” இவவாறு கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: