அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் சசிகலா கலந்துள்ளார் - கருணாஸ் எம்.எல்.ஏ

கருணாஸ்

 • Share this:
  அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உயிரணுக்களாக சசிகலா கலந்துள்ளார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

  வேலூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் அகமுடையார் சமுதாய மாணவ, மாணவிகள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் கலந்துகொண்டு எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா கிங்கிஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான இலவசப் புத்தகங்களையும் வழங்கி விழாவில் பேசினார்.


  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.

  தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற குற்றசாட்டுகளின் உண்மையை அறிய வேண்டும். தமிழக மக்களின் மண்ணும்  இனம்சார்ந்த மொழி, அடையாளம் போன்றவற்றை அழித்தவர்களுக்கான ஆதரவாக இப்படம் இருந்தால் அதனை ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.ராஜபச்சேவிடம் பணம் பெற்றுக்கொண்டு கருணாஸ் உல்லாசமாக இருப்பதாக வதந்திகளைப் பரப்பினார்கள் அவ்வாறு இது இருந்துவிட கூடாது என்றார்.

  தமிழ்நாட்டில் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும், சினிமாவில் சுதந்திரம் இருக்கிறது என்று கூறிய கருணாஸ், வெகுஜன உணர்வுகளைப் புண்படுத்துவது கூடாது. முரளிதரன் கதையை வைத்து ஒட்டுமொத்த தமிழர்களின் மொழியையும் இனத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக திரைப்படம் எடுக்கப்பட்டால் அதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

  2021ம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. வரவுள்ள தேர்தலில் கள்ளர், மறவர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அங்கிகாரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை வழங்க வேண்டும். அவ்வாறு கோரிக்கைகளை ஏற்றுகொள்பவர்களுக்குத்தான் ஆதரவு. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிரணுக்களிலும் சசிகலா கலந்துள்ளார். ஜெயலலிதாவின் அனைத்து நடவடிக்கைகளிலும் சசிகலா உள்ளார். பிரதமரின் ஆசையை நிறைவேறவிடாமல், தான் நினைத்த ஒருவரை சசிகலா முதல்வராக்கினார் என்றார்.

  தனி சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என்று கூறிய கருணாஸ், கூட்டணிக் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம், கட்சிக் கட்டமைப்பு தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு இல்லை.

  என்னுடைய தொகுதியில் நான் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது. குடிமராமத்து திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. அதிமுக ஆட்சி குறித்து மக்களிடம் வெறுப்போ கோபமோ இல்லை என்றார்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: