கருணாஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவன தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் மீது புகாரளித்த, அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • Last Updated: September 9, 2020, 11:24 AM IST
  • Share this:
கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை ராமநாதபுரத்தில் தடை செய்யக்கோரி புகார் மனு அளித்த, அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடிகர் கருணாஸ் தொடங்கியபோது அதன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி ஒதுக்கப்பட்டது


அந்த தொகுதியில் போட்டியிட்ட கருணாசிற்காக சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை வேலை செய்தார். நடிகர் கருணாஸ் வெற்றியும் பெற்றார்

அதன் பிறகு 2017ஆம் ஆண்டு கருணாஸ் உடன் பாண்டித்துரைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிலிருந்து கருணாஸை நீக்குவதாக அதிரடியாக மதுரையில் பேட்டியளித்தார் பாண்டித்துரை. அதன் பிறகு இருவருக்கும் இடையிலான விரிசல் அதிகரித்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிலிருந்து பாண்டித்துரை விலகினார்.

பின்னர் முக்குலத்தேவர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக பாண்டித்துரை இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை பாண்டித்துரை அளித்தார்.அந்த புகாரில் கருணாஸ் தனது கட்சியில் ரவுடிகளுக்கு பதவிகளை கொடுத்து, முக்குலத்தோர் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறியிருந்தார். மேலும், முத்துராமலிங்கம், சூசை என்ற சுனாமி சேதுபதி உள்ளிட்டவர்களை ஏவி தன்னை கொலை செய்ய கருணாஸ் முயற்சிப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.

மணலூர் செந்தில் என்பவருடன் சேர்ந்து தன்னை சேதுபதி கொலை செய்ய முயன்றதாகவும், அது தொடர்பாக பரமக்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் கூறியிருந்தார்.

ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் சமூக இளைஞர்கள் மீது முத்துராமலிங்கமும், சேதுபதியும் தாக்குதல் நடத்தி, பிரிவினையை தூண்டி விடுவதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் பாண்டித்துரை கேட்டுக்கொண்டிருந்தார்.

படிக்க...கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கருணாசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் பாண்டித்துரை வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது.

பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் பாண்டித்துரை குடும்பத்துடன் வசித்து வருகிறார். திங்கட்கிழமை இரவு மதுரை சென்றுவிட்டார். செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் முகப்பு விளக்கை எரிய விடாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

வீட்டின் இரும்பு கதவில் பட்டு பாட்டில்கள் சிதறியுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள்ளே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மேலும் வீட்டின் முன்பு நிறத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, குடிதண்ணீர் வாகனங்களின் கண்ணாடிகளை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருணாஸ் மீது அளித்த புகாரால் அவர் ஆதரவாளர்களால் இந்த தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு யாரேனும் தாக்குதலில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading