Home /News /tamil-nadu /

கருணாநிதியின் 64 ஆண்டுகால திரைப்பயணம்: தீப்பொறி பறந்த பராசக்தி, மனோகரா வசனங்கள்..

கருணாநிதியின் 64 ஆண்டுகால திரைப்பயணம்: தீப்பொறி பறந்த பராசக்தி, மனோகரா வசனங்கள்..

கருணாநிதி

கருணாநிதி

திராவிட இயக்கத்தின் பிரச்சாரப் பேராயுதமாக திரைப்படங்களைப் பயன்படுத்தியவர் கருணாநிதி. அவரது கனவுத் தொழிற்சாலைப் பயணம் இது.

  "தென்றலைத் தீண்டியதில்லை நான், ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்"….. என்று வரும் பராசக்தி திரைப்படத்தின் உணர்ச்சிமிகு நீதிமன்ற காட்சி, தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத அடையாளம், இன்றைய தலைமுறையினரையும் காந்தமென ஈர்க்கும் ஒன்று.

  "மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது" என்ற" பூம்புகார்" வசனமாகட்டும், "வட்டமிடும் கழுகு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்," என்னும் "மனோகரா" வசனமாகட்டும், சமகால அரசியலுக்கும் சவுக்கடி தருபவை.

  Special arrangement


  இந்த மயக்கும் சொற்சிலம்பங்களுக்குச் சொந்தக்காரர்தான் கருணாநிதி. திரைத்துறையில் வசன நடைக்குப் ராஜபாட்டை அமைத்து, தனித் தமிழ் இயக்கத்தின் அடியொற்றி புதுமையைப் புகுத்திய முன்னோடி. நாதா, பிரபோ, மணாளா என்று, காதலி காதலனை அழைக்கும், பிராமணத் தமிழே, உரைநடைத் தமிழாய் விளங்கியதற்கு முற்றுப்புள்ளியாய் அமைந்தது கலைஞரின் வருகை.

  சேலம் மெர்க்குரி ஸ்டூடியோஸ்-ல் முதலில் வேலைக்குச் சேர்ந்த கருணாநிதி, பின்னர் சென்னை ஜூபிட்டர் பிக்சர்ஸ்-ல் இணைந்தார். அங்கு, தமது 23வது வயதில் "ராஜகுமாரி" திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக கால்பதிக்கிறார். படத்தின் கதாநாயகன் வேறு யாருமில்லை, எம்.ஜி.ஆர் தான்!

  இந்த கூட்டணி, பின்னர் பல வெற்றிப் படங்களை அளித்தது. அடுத்த படமான, "அபிமன்யு"-விலேயே, மூன்று இலக்க சம்பள அந்தஸ்திற்கு உயரும் கருணாநிதி, பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, அண்ணாவின் தலைமையில் 1949ல் உதயமான திமுக-வில் இணைகிறர்.

  1949 முதல், 1957ல் குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ ஆக வெற்றிபெறும் காலகட்டத்திற்குள், சினிமா உலக பயணத்தில் அழுத்தமான முத்திரை பதிக்கிறார். 1952ல்"மந்திரி குமாரி"-க்குப் பின்னர் கலைஞரின் கூர்தீட்டிய வசனங்களால் உருவான பராசக்தி, சிவாஜி கணேசனின், முதல் படம் மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போரை அடுத்து பர்மாவில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் பற்றிய முதல் பதிவும் அதுதான்.  மூட நம்பிக்கைளையும் சமூக இழிவுகளையும் சாடும் திரைப்படத்தின் பகுத்தறிவுப் பரப்புரை காரணமாக, அன்றைய காங்கிரஸ் அரசு சில காலம் திரைப்படத்திற்குத் தடை விதித்தது. தொடர்ந்து, வெளிவந்த மனேகரா, திரும்பிப்பார் ஆகியவை, பெருவெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ் திரையுலகின் மொழி நடையை முற்றிலும் புரட்டிப்போட்டு, இலக்கிய நயம் குன்றாத நற்றமிழுக்கு ஏற்றம் தந்தது.

  இவரது கைவண்ணத்தில், சரித்திர கதைகளும், சமூக விழிப்புணர்வுக்காணகளங்களாக அமைந்து திராவிட தேசியம் பேசின. தனது திரைப்படங்களில் அரசியல் வீச்சும், சமூக அக்கறையுடன், மென்மையான காதலை நவீன அழகியலுடன் வெளிபடுத்திய இந்த கால கட்டமே, கருணாநிதியின் திரையுலக பொற்காலம் எனலாம்.

  64 ஆண்டுகள், திரைக்கதை, வசனம், பாடல்கள் என சினிமா உலகில் வலம் வந்தாலும், திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ் அடையாளத்தில் பெண்கள் பற்றிய பழமைவாத பார்வையையே, கலைஞரும் உயர்த்திப்பிடிக்கிறார் என்ற விமர்சனம் உண்டு. கற்புக்கும் கண்ணகிக்கும் எதிராக மாதவி என்ற இருமைக்கு, கலைஞரின் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல.

  நவீனகால பெண்கள், மாதவியைப்போல நாகரிகத்தை ஏற்றுக்கொண்டாலும், அதிலேயே நீடிக்காது கண்ணகியைப்போல குடும்ப விளக்காக விளங்கவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. மேலும், நாடகத்துறையில் இருந்து திரையுலகுக்கு வந்ததால், கலைஞரின் அனைத்து திரைப்படங்களிலும் வசனத்திற்கான அழுத்தம் மேலோங்கியிருந்தது.

  இவரது திரைப்படங்களின் ஒலிச்சித்திரம் பரவலான வரவேற்பை பெற்றிருந்ததும், இதன் தாக்கம், "விதி" திரைப்படம் வரை தொடர்ந்ததும், குறிப்பிடத்தக்கது.

  நீண்ட கலையுலக பயணத்தில், சறுக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. எம்.ஜி.ஆர், கருணாநிதி, பி.எஸ். வீரப்பா ஆகிய மூவரும் இணைந்து தொடங்கிய மேகலா பிக்ச்சர்ஸ், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் அற்ப ஆயுளில் முடிந்தது.

  எம்.ஜி.ஆர்-உடனான முரன்பாடுகளை அடுத்து, அப்போது ஜேம்ஸ்பாண்ட் பாணியைக் கைபற்றிய நடிகர் ஜெய்சங்கர் கருணாநிதியின் திரைப்படங்களில் ஆஸ்தான நாயகனானார். தனது மூத்த மகனான மு.க.முத்துவை, "பிள்ளையோ பிள்ளை" திரைப்படம் மூலம் சினிமா உலகில் அறிமுகப்படுத்தினார். ஆனால், மு.க.முத்து-வால் நீடித்து நிலைக்க இயலவில்லை.

  நீண்ட இடைவெளிக்குப் பின், 1985ல் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கும் "பாலைவன ரோஜாக்கள்", வெற்றிப்படமாக அமைந்ததது. அதன் பின்னர் அவர் திரைக்கதை அல்லது வசனத்தில் வெளிவந்தவை சொல்லும்படியாக சோபிக்கவில்லை. காரணம், புதிய கதைசொல்லிகளின் வரவால், தமிழ்த் திரையுலகம், புதிய வெளிக்கு, புதிய தடங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், தமிழ் சினிமா கடந்துவந்த பாதையில், கருணாநிதி ஒரு திருப்புமுனை என்றால், அது மிகையில்லை.

  புகழ்பெற்ற வசனங்கள்

  பராசக்தி:

  "கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக',

  "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்…. வாழவிட்டார்களா என் கல்யாணியை?"

  மணோகரா

  பொறுத்தது போதும்...பொங்கியெழு'

  "வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கின்றன!"

  மருதநாட்டு இளவரசி

  "நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே! நீ, சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்?

  மேலும் படிக்க... கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு - வீடியோ

  முக்கிய திரைப்படங்கள்  படம் ஆண்டு
  முதல் படம் - ராஜகுமாரி 1947
  கடைசி படம் பொன்னர் சங்கர்  2011
  மருத நாட்டு இளவரசி 1950
  மந்திரி குமரி 1950
  பராசக்தி 1952
  மணோகரா 1952
  பணம் 1952
  திரும்பிப் பார் 1953
  மலைக்கள்ளன் 1954

   
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: DMK Karunanidhi, Karunanidhi's memorial

  அடுத்த செய்தி