முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Karunanidhi : சமூக நீதியை நிலை நிறுத்த அரசு திட்டங்களை முன்னெடுத்த கருணாநிதி!

Karunanidhi : சமூக நீதியை நிலை நிறுத்த அரசு திட்டங்களை முன்னெடுத்த கருணாநிதி!

கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஆதிக்கம் மிக்க நபராகவே திகழ்ந்தார். சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

திமுகவின் தலைவராக தனது இறுதிநாள் வரை பதவி வகித்த கருணாநிதி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஆதிக்கம் மிக்க நபராகவே திகழ்ந்தார். அண்ணா மறைவுக்குப் பிறகும், எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகும் தமிழகத்தை ஆட்சி செய்தவர் என்ற வகையில் மட்டுமின்றி, சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார். இன்று கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், கடந்த 1924ம் ஆண்டு இதேநாளில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் கருணாநிதி. மாணவப் பருவத்திலேயே தமிழ் மீது தீராத ஆர்வமும், காதலும் கொண்டிருந்த கருணாநிதி, நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். 14வது வயதிலேயே அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக ஈடுபட்ட கருணாநிதி, 1953ம் ஆண்டில் கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக உருவெடுத்தார். 1957ல் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது கருணாநிதி ஆற்றிய உரை தமிழின் மீது அவருக்கு இருக்கும் காதலை உணர்த்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுகவில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளுக்கு உயர்ந்த கருணாநிதி, கட்சியின் பொருளாளராக 1960ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 1967ல் தமிழகத்தில் நடந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பதிவு செய்தது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி, அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது யாருமே கணித்திருக்க வாய்ப்பில்லை....

கருணாநிதி

அண்ணாவின் மறைவுக்குப் பிறகும், எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் கூட திமுகவின் தலைவராக திறம்பட செயல்பட்ட கருணாநிதி, கலைத்துறையிலும் பெரும் பங்காற்றினார். இவர் எழுதிய நாடகங்கள், திரை வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

எம்.ஜி.ஆர். உடனான கருத்து மோதலுக்கு முன்பு, 1950ல் மந்திரிகுமாரி படத்திற்கு கருணாநிதி எழுதிய கதையும், வசனமும், எம்.ஜி.ஆர். என்ற நடிகரை, உச்ச நட்சத்திரமாக உயர்த்தியது. மக்கள் திலகமாக தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடித்த எம்.ஜி.ஆர்., ஆட்சியை கைப்பற்றிய போதிலும், சிறந்த எதிர்க்கட்சியாக திமுகவை வழிநடத்தியதன் மூலம் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவே திகழ்ந் தார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சரான கருணாநிதி, சமூக நீதி என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அரசின் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தமக்கென ஓர் இடத்தை தேசிய அரசியலில் பிடிக்க அவர் எப்போதுமே முயன்றதில்லை. இதுபற்றி கேள்விகள் எழுந்த போதெல்லாம் எனது உயரம் எனக்குத் தெரியும் என்றே கருணாநிதி பதிலளித்திருந்தார்.

அதேநேரம் தமிழகத்தின் நலனுக்காகவும், தனிப்பட்ட நட்புக்காகவும் தேசிய தலைவர்களுடன் கருணாநிதி எப்போதுமே தனிப்பட்ட நல்லுறவை தொடர்ந்து கடைபிடித்தார். இந்திராவில் தொடங்கி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவகௌடா, வாஜ்பாய், அத்வானி, சோனியா என அந்த பட்டியல் நீண்டது.

தனது நீண்ட அரசியல் பயணத்தில் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த கருணாநிதி, 1999ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், பிரதமர் வேட்பாளரான வாஜ்பாய் உடன் கருணாநிதிக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பாரதிய ஜனதாவிடம் வாங்கிக் கொண்டார். தேசிய அரசியலில் கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கிற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Must Read : வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! கருணாநிதி பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2003ம் ஆண்டில் விலகிய கருணாநிதி, 2004ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமர முக்கிய பங்காற்றினார். தமிழ்ச் சமூகத்துக்காக கருணாநிதி ஆற்றிய பங்களிப்புக்காக போற்றப்பட்டாலும், அரசியல் களத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்த காரணத்திற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். மறைவுக்குப் பிறகும் கூட அண்ணாவின் அருகிலேயே இளைப்பாற வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையை நனவாக்க சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று கருணாநிதி நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார்.

First published:

Tags: DMK, DMK Karunanidhi, MK Stalin, Politics, TM Politics