மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக
ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ’தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி வீசினாலும் கட்டுமரமாக தான் இருப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்துவிட மாட்டேன். தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை நெருப்பில் தூக்கி போட்டாலும் விறகாக தான் வீழ்வேன். அடுப்பு எரித்து நீங்கள் சாப்பிடலாம் என்ற வைர வரிகளுக்கு சொந்தகாரர் மட்டுமல்லாது சொன்னதுபடியே வாழ்ந்து காட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி.
நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி மட்டும்தான். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் மாமன்றத்தில் இருந்தவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த இருந்த காலத்தில் கலைஞர் உருவாக்கியது தான் இன்று நாம் காணும் நவீன தமிழகம்.
தமிழ்நாட்டின் அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத், பாரதிதாசன், எம்ஜிஆர், கண்ணதாசன், கிருபானந்த வாரியர், குன்றக்குடி அடிகள் போன்ற தலைவர்களுடன் தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் கருணாநிதி.
இதையும் படிங்க: முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்: வேல்முருகன் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
கருணாநிதி பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். வரும் ஜூன் 3ம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்கப்படும்” என்று பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.