ஐயோ கொல பண்றாங்க அலறல்... நள்ளிரவில் கருணாநிதி கைது... மறக்க முடியுமா அந்த நாளை?

கருணாநிதி கைது தினம்

  திமுகவின் டி.ஆர்.பாலு தன்னை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஆனால், எதற்கும் போலீசார் அசரவில்லை.  கருணாநிதியை கைது செய்ய அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில்  கருணாநிதியை போலீசார் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து சென்றனர்

  • Share this:
 ‘அய்யோ கொல பன்ன பாக்குறாங்க’ என்று  அலறிய அலறல் தமிழகம் முழுவதும் ஒலித்தது அந்த நாள்.  நள்ளிரவில் வீட்டில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

ஜூன் 20,2021, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்தான்  இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றது.  1991-1996 வரை ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அரசு மீது பல்வேறு  ஊழல் குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக 1996ல் திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்றதும் தகுந்த நேரத்திற்காக காத்திருந்த அதிமுக அரசுக்கு கிடைத்த துடுப்புச் சீட்டுதான் மேம்பாலம் ஊழல். சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக கருணாநிதியை கைது செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் என்பதால்  கைது நடவடிக்கை ரகசியமாகவே மேற்கொள்ளப்படது.  சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே கைது செய்யப்போகும் விஷயம் தெரியும்.

நள்ளிரவில் போலீசார் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு விரைந்தனர்.   அப்போதைய மத்திய அமைச்சர் முரசொலிமாறன், டி.ஆர். பாலு தன்னை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எதற்கும் போலீசார் அசரவில்லை.  கருணாநிதியை கைது செய்ய அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில்  கருணாநிதியை போலீசார் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து சென்றனர். இதில் அவர் தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.  பின்னர் அவரை கைது செய்து வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, அய்யோ.. அய்யோ.. கொல பன்றாங்களே என அலறியது ஒரு குரல்...  இந்த காட்சிகள் சன் தொலைக்காட்சியில் நாள் முழுவதும்  ஒளிபரப்பானது.  கைது சம்பவத்தால் கோபாலபுரம் இல்லமே போர்க்களமாக காட்சியளித்தது.கருணாநிதியை கைது செய்து  லுங்கியுடன் வேனில் ஏற்றிய போலீசார், விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழித்தனர்.  வேப்பேரி காவல் நிலையத்துக்கு கருணாநிதி அழைத்துவரப்பட, அவரது குடும்பத்தினர் திமுக தொண்டர்களும் அங்கு குவிந்தனர். அப்போது கருணாநிதி குடும்பத்தாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு கருணாநிதியை ஆஜர்படுத்திய போலீசார்,  பின்னர் சென்ரலில் இருந்த மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.  இதை எதிர்த்து சிறை வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் கருணாநிதி. அவருடன் மகள் கனிமொழியும் அமர்ந்திருந்தார்.  இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கருணாநிதி கைது செய்யப்பட்ட தகவல் பரவ,  திமுகவினர் வெகுண்டெழுந்தனர்.  சிறை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவியத்தொடங்கினர்.  அவர்களை தடியடி நடத்தி கலைக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர். இதையடுத்து, கருணாநிதிக்கு சிறைக்கு செல்ல சம்மதித்தார்.  இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக அரசியலில் மறக்க முடியாத நாளாகவே இன்றும் கருதப்படுகிறது.
Published by:Murugesh M
First published: