காங்கிரஸுல் 33% இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் - கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் என்று எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு அமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. எல்லா கட்சிகளும் விருப்பமனு பெற்ற வேட்பாளர்களிடம் நேர்காணல் செய்யத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியும் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று முதல் நேர்காணலைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் தி.மு.கவுடன் இன்னும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவில்லை.

  இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘ காங்கிரஸில்33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மகளிர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்கள், மகளிர், சிறுபான்மையினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். பா.ஜ.க அல்லாத ஆட்சி தமிழகத்தில் வரவேண்டுமென ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு என்றால் வரும் தேர்தலில் அதிக அளவில் சிறுபான்மையினரும் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்றவர்களில் 9 பேரில் ஒருவர் மட்டுமே பெண். தி.மு.க கூட்டணியில் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவு கிடைக்கும். பா.ஜ.கவுக்கு செல்வாக்கு இருந்தால் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: