MP, MLA சீட்டுகளை கூவி, கூவி விற்கும் கும்பல்... தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி மோசடி

Youtube Video

முதலமைச்சர் அலுவலகம் வரையிலான முக்கிய அலுவலகங்களின் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது.

  • Share this:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான், எம்.எல்.ஏ.க்கள்; எம்.பி.க்கள். ஆனால், எம்.எல்.ஏ. எம்பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பிரதமர் அலுவலகம் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரையிலான முக்கிய அலுவலகங்களின் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் 54 வயதான மகாதேவையா; இவர் அங்கு பெரும் பணக்காரராக வலம் வருபவர்; இவரது மகன் 29 வயதான அங்கித். 2018ம் ஆண்டு, பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பிசிக்கல் டைரக்டராக இருந்து வரும் செந்தில்குமார் என்பவர் 2018ம் ஆண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகளிடம் எனக்கு எப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில துணைவேந்தராக பதவி தருவீர்கள் எனக் கேள்வி கேட்டுள்ளார் முதலில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பின்னர் விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆளுநர் தனக்கு நெருக்கம் எனக் கூறி அறிமுகமான மகாதேவையா, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில்குமாரிடம் ஒன்றரைக் கோடி ரூபாயைப் பறித்துள்ளார்

மேலும், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணைவேந்தர் பணியில் நியமனம் செய்திருப்பதாகவும் போலி மின்னஞ்சலையும் செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ளார் அதிகாரிகள் மின்னஞ்சலை சோதனை செய்து பார்த்தபோது அந்த மின்னஞ்சல் போலியாக உருவாக்கப்பட்டது தெரியவந்தது. அதில் அனுப்பப்பட்ட தகவலானது அச்சு அசலாக ஆளுநர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்தது

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மகாதேவையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா காலத்தில் ஜாமினில் வெளியே வந்த மகாதேவையா மீண்டும் தன் கைவரிசையைக் காட்டி சிக்கியுள்ளார் வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர், ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தனக்கு எம்பி சீட் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் ஏமாற்றியதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்

மோசடிக் கும்பல் மைசூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட மகாதேவய்யா, அவரது மகன் அங்கித் மற்றும் இவர்களது நண்பரான ஓசூரைச் சேர்ந்த 34 வயதான ஓம் ஆகிய மூவரையும் கைது செய்தனர் போலீசார் விசாரணையில், பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில ஆளுநர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொண்டு எம்பி, எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது

மகாதேவையாவின் மகன் அங்கித் எம்ஈ பட்டதாரி. அபவர் பிரதமர் அலுவலகம், பல மாநில முதலமைச்சர்களின் அலுவலகங்கள், பல மாநிலங்களின் ஆளுநர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை தயாரித்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இப்படி ஒவ்வொருவரிடம் இருந்தும் 1.5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதே பாணியில் இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் மகாதேவய்யா பெங்களூரில் பெரும் பணக்காரர் என்பதால் அவர் மீது பெங்களூரு போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

அதனால் பெங்களூரிலிருந்து மோசடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி போலி சான்றிதழ்களை உருவாக்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார்.  அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

இவர்களுக்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புகள் உள்ளதாலும் மோசடி செய்த பணத்தில் இவர்கள் சொத்துக்கள், வீடுகள் வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தற்போது வரை இவர்கள் மீது பிரபல அரசு பல்கலைக்கழக பிசிக்கல் டைரக்டர் செந்தில்குமார் மற்றும் சென்னை வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்

ஆனால் இவர்களால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழகத்தில் மட்டுமே ஏமாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர்? இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இவர்கள் ஏமாற்றி அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Published by:Vijay R
First published: