HOME»NEWS»TAMIL-NADU»kanyakumari constituency where dmk and aiadmk have been alternately winning for 36 years video vai

உங்கள் தொகுதி: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறும் என்ற 36 ஆண்டுகால கணிப்புப்படி இந்த தேர்தலில் அதிமுக வாகை சூடுமா.. அல்லது இந்த கணிப்பு பொய்யாகுமா... விடைக்காக தேர்தல் வரை காத்திருப்போம்.

  • Share this:

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்களா விரிகுடா என முக்கடல் சங்கமிக்கும் நாட்டின் தென்கோடி தொகுதி கன்னியாகுமரி... பார்வதியின் அவதாரமாக கருதப்படும் பகவதி அம்மன், மூக்குத்தி அம்மனாக கடற்கரையோரம் கோயில் கொண்டிருக்கிறார். விவேகானந்தர் 3 நாட்கள் தவம் செய்த பாறையும், 2 அடியால் உலகை அளந்த வள்ளுவர் 113 அடி சிலையாக வீற்றிருக்கும் இடமும் உலக அளவில் பிரசித்தமானவை. கன்னியாகுமரி கடல் சங்கு மாலைகள் யாரையும் வசீகரிக்கக் கூடியவை... மீனும் நெல்லும் சேர்ந்து இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கின்றன.

சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்களும், மீன்பிடித் தொழிலாளர்களும் கடலை நம்பியுள்ளனர்.. தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் பூதப்பாண்டியில் முவாயிரத்து 250 ஹெக்டேர் அளவுக்கு நடைபெறும் நெல் விவசாயத்தை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டார் நம்பியுள்ளனர். 5000 ஹெக்டேரில் வாழை, 10 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை, கீரிப்பாறை பகுதியில் 185 ஹெக்டேரில் ரப்பரும் பயிரிடப்பட்டுள்ளது. மலர் சந்தையில் பெயர் பெற்ற தோவாளையில் கட்டப்படும் மாணிக்கமாலை திருவிதாங்கூர் மகாராஜாவையை வசீகரித்த சிறப்பு மிக்கது. அரளி, ரோஜாப்பூ, நொச்சி கொண்டு கட்டப்படும் இந்த மாலை மாணிக்கம் போன்று மின்னுவதால் காலங்கடந்தும் அந்தப் பெயரோடு வாசம் வீசுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் 1957 முதல் 2016 வரை 14 தேர்தல்கள் நடந்துள்ள நிலையில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வென்றுள்ளது. திமுக 5 முறை வாகை சூடியுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி வெற்றி பெற்று வந்துள்ளன.2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மூன்றாம் முறையாக அதிமுக சார்பில் களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் ஆஸ்டின் 5,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

கடல் அலை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை சுனாமி வந்த காலம்தொட்டு எழுப்பட்டு வந்தாலும் அரசு இதுவரை காதுகொடுக்கவில்லை. ஆயிரம் செங்கல்சூளைகள் செயல்படும் இந்த தொகுதியில் வண்டல் மண் கிடைப்பதே அரிதாக இருப்பதால் குளங்களை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் உரக்க ஒலிக்கிறது. நெல் விளையும் பறக்கை துவரக்காடு பகுதிகளில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைந்தால் விவசாயிகள் நிம்மதியடைவர்கள். இன்னும் பல கோரிக்கைகளோடு ஆட்காட்டி விரலில் மை பூசிக் கொள்ள தயாராகிவிட்டார்கள் கன்னியாகுமரி மக்கள்.

மேலும் படிக்க...கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார்?: முதலமைச்சர் கேள்வி

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறும் என்ற 36 ஆண்டுகால கணிப்புப்படி இந்த தேர்தலில் அதிமுக வாகை சூடுமா.. அல்லது இந்த கணிப்பு பொய்யாகுமா... விடைக்காக தேர்தல் வரை காத்திருப்போம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: