தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற இடை தேர்தலில் 12 வேட்பாளர்களும், சட்டமன்ற தேர்தலில் 67 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அடங்கியுள்ளன. கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச். வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை விட 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு காரணமாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் இணைந்து நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மறைந்த எச்.வசந்தகுமார் மகனும் நடிகருமான விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டயிடுகிறார். இத்தொகுதியை பொறுத்தமட்டில் நாம் தமிழர் கட்சி, மக்கள்நீதிமய்யம் உட்பட மொத்தம் 12 வேட்பாளார்கள் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதேப்போன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்களும், பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்களும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 15 வேட்பாளர்கள், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களும் என மொத்தம் 67 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 7,84,658 ஆண் வாக்காளர்கள், 786781 பெண் வாக்காளர்கள், 212 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1571651 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மொத்தம் 2243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பதற்றமான 288 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1271 வாக்குச்சாவடிகள் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையம் கவனிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர், கையுறை ஆகியன வழங்கப்படுவதோடு, சுகாதார பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேப்போன்று மாற்று திறனாளிகளுக்கு 631 சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரிநாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு செலுத்தி வருகின்றனர். வாக்குச்சாவடிகளல் காலை முதலே ஆர்வத்துடன் வரும் வாக்காளர்களின் வருகை காணப்படுகிறது. தொடர்ந்து வேட்பாளர்களும் அவர்களது வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க...
கொடைக்கானாலில் சுற்றுலா தலங்கள் இன்று மூடல்.. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை..
அதேப்போன்று கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றம் பொதுத்தேர்தலில் குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேப்போன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனும் தனது வாக்கினை வரிசையில் நின்று கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு செலுத்தினார்.
செய்தியாளர்: சரவணன் ஐயப்பன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்