கன்னியாகுமரி தொகுதியை குறிவைக்கும் காங்கிரஸார் - பிரியங்காவை முன்னிறுத்தும் கார்த்தி சிதம்பரம்

கன்னியாகுமரி தொகுதியை குறிவைக்கும் காங்கிரஸார் - பிரியங்காவை முன்னிறுத்தும் கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தியுடன் விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்திக் சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது கட்சியினரிடையே பேசு பொருளாகி உள்ளது. 

  • Share this:
காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 25-ம் தேதி முதல் இன்று மாலை 5 மணி வரை 234 சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பின் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளில் கன்னியாகுமரி தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் முக்கியமாக மறைந்த எம்.பி எச்.வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் மனு தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தன் தந்தை கன்னியாகுமரி தொகுதியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செய்திருப்பதாகவும், மேலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் நினைத்திருந்தார். அவரது கனவை நிறைவேற்றவே, மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறேன்” என்று விஜய் வசந்த் கூறினார்.

அதேபோல சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி உள்ளிட்ட பலரும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விருப்ப மனுவை இன்று சத்தியமூர்த்தி பவனில் தாக்கல் செய்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் போது, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் கட்சியின் தலைவர்கள் போட்டியிட அவர்களது ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்வது இயல்பானது என்றபோதும், இம்முறை கார்த்திக் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.இதுகுறித்து, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கூறுகையில், யார் வேண்டுமானாலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், உரிய நபரிடம் அவரது விருப்பத்தை கட்சி தரப்பில் கேட்கப்படும். அதன்பின்பே, வேட்பாளர் தேர்வுக்குழு பரிசீலிக்கும். பிரியங்கா காந்தி தமிழகத்தில் போட்டியிட்டால் அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெரிய கௌரவமாக இருக்கும்" என்றார்.
Published by:Sheik Hanifah
First published: