கன்னியாகுமரியில் மீனவ கிராமங்களில் 30 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள தூத்தூர், இனயம் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் தேர்தல் தினத்தன்று சுமார் 30 ஆயிரம் பேர் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க அனுமதி அளிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால், தேர்தல் அன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
“இத்தனை ஆண்டுகாலம் தேர்தலில் வாக்களித்துள்ளோம். திடீரென இப்போது வாக்கு இல்லை என்று அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. நாங்கள் வாக்களிக்க கூடாது என்று திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மாதிரிப்படம்
இந்த விவகாரம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாந்த் மு.வடநேரே அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக தேர்தல் துறை வட்டாரங்கள் கூறுகையில் “2018 செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி 31-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.
பட்டியல் திருத்த பணியின் போது 7671 மற்றும் துணைப்பட்டியல் வெளியானபோது 2371 என மொத்தம் 10,042 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
மரணம், இரட்டை பதிவு ஆகிய பெயர்கள் மட்டுமே. 40 ஆயிரம் பெயர்கள் நிக்கம் என்று கூறுவது தவறான தகவல் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளதாக தேர்தல் அலுவலர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.