கள்ளக் காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு: ஆள்வைத்து கொலை செய்த கள்ளக்காதலன்

மாதிரிப்படம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ளக் காதலியை அபகரித்த இளைஞரை ஆத்திரத்தில் பிரபல ரவுடி குத்தி கொலை செய்துள்ளார்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் உள்ள ஆர்.சி தெருவை சேர்ந்தவர் 28 வயதான சுஜித். இவர் திங்கள்விளை சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் திருமண இல்லங்களில் கேட்டரிங் சர்வீசும் செய்து வருகிறார்.

  அவ்வாறு திருமண வீடு ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த போது வாடிவிளை பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் கள்ளத் தொடர்பாக மாற இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

  தீபாவுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். முன்னதாக அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுரேஷ் என்ற ரவுடியுடன் தீபாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

  புதிதாக மீன்வியாபாரி சுஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தால், ரவுடி சுரேஷுடனான தொடர்பை சிறிது சிறிதாக கைவிட ஆரம்பித்தார் தீபா. பலமுறை தீபாவிடம் செல்போனில் பேச முயன்ற போதும், அவர் இணைப்பை துண்டித்து விட்டுள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சுரேஷ், தன்னுடனான தொடர்பை கைவிட காரணம் என்ன? என தீபாவிடம் விசாரித்துள்ளார். அவர் பதில் கூறாத நிலையில், சுஜித்துடனான பழக்கம் சுரேஷுக்குத் தெரிய வந்தது.

  இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சுரேஷ், தனது கூட்டாளி விமல்ராஜ் என்பவருடன் இணைந்து சுஜித்தை கொலை செய்ய திட்டமிட்டார்.  அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுஜித்துக்கு ஃபோன் செய்து, பேச வேண்டும் என்று கூறி மாங்குழி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

  சுரேஷ் அழைத்த இடத்திற்கு சுஜித் மற்றும் அவரது நண்பர் ஸ்டெபின் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு காத்திருந்த சுரேஷ் மற்றும் விமல்ராஜ், கத்தியுடன் பாய்ந்து சுஜித்தின் நண்பர் ஸ்டெபினை அடித்து துரத்தி விட்டனர்.

  பின்னர் சுஜித்தின் கைகளை விமல்ராஜ் பின்பக்கமாக பிடித்துக் கொள்ள, மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுஜித், துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் போலீசார் சுஜித்தின் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைவழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, ரவுடி சுரேஷ் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளைத் தேடி வந்தனர். சுஜித்துடன் கள்ளத் தொடர்பில் இருந்த தீபாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்

  இதனிடையே சுரேஷ் அவரது கூட்டாளியுடன் தக்கலை அருகே மறைந்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, புதன்கிழமை மாலை கொலையாளிகளை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தன்மேல் உயிராக இருந்த தீபா தன்னை கண்டுகொள்ளாமல் போனதற்கு சுஜித்துடனான கள்ளக்காதல் விவகாரம் காரணம் என்பதால்  அவரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

  சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி விமல்ராஜை கைது செய்த போலீசார் அவர்களை இரணியல் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: