கன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்

உயர் அதிகாரியின் நெருக்கடி குறித்து தமிழக முதல்வர், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம், பிரதமர் என உயர்மட்ட அளவில் புகார்கள் அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை என்கிறார்.

  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தனக்கு, அந்த துறையின் உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் பெமிலா. கடந்த 3 ஆண்டுகளாக முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். புதன்கிழமை அன்று பிற்பகலில் உயரதிகாரிகள் பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாகக் கூறி, ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் மகனுடன் அமர்ந்து கொண்டார். தனது உயர் அதிகாரியான மருத்துவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் அவர் மீது காவல் நிலையத்திலும் துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார்கள் அளித்ததாகவும் கூறினார்.

தன்னை மருத்துவமனையில் இருந்து தனிமைப்படுத்துவதற்காக ஊழியர்களை அந்த அதிகாரி பயன்படுத்தி வருவதாகவும், தனது உயிருக்கு அச்சம் ஏற்படும் அளவுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை வீட்டிற்கு அவ்வப்போது அனுப்பி மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதனால் வீட்டில் இருக்கும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என எண்ணி தினந்தோறும் பணிக்கு தனது குழந்தையோடு வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், உயர் அதிகாரியின் நெருக்கடி குறித்து தமிழக முதல்வர், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம், பிரதமர் என உயர்மட்ட அளவில் புகார்கள் அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை என்று கூறும் மருத்துவர் பெமிலா, தனது பிரச்னைக்கு காரணமானவர்களில் ஒருவரான சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் மூலமாகவே தனது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பணகுடி மருத்துவமனையில் பணியாற்றியபோது அங்குள்ள உயர் அதிகாரியாக இருந்த கோலப்பன் தன்னை பாலியல் ரீதியிலும் பல்வேறு வகையில் இடையூறு செய்ததாகவும் கூறினார். அவரும் தற்போதைய தனது உயர் அதிகாரியும் சேர்ந்து தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். மேலும், வீடியோ பதிவு முறையில் விசாரிக்கக் கோரியும் விசாரிக்காதவர்கள், தன்னை வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவர் பெமிலாவின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த போஸ்கோ ராஜா, வேலைக்கு வரமாட்டார் என்றும் கேட்டால் பாலியல் குற்றச்சாட்டு கூறுவார் என்றார். இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இருக்கிறதா என பெமிலா கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக்கும் லஞ்சம் கேட்பதாகவும் லஞ்சம் தர மறுத்தால் இதுபோன்று குற்றசாட்டுகளை கூறி டிரான்ஸ்பர் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் மருத்துவர் உயர் அதிகாரிகளின் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கும் நிலையில் அதை புகாருக்கு உள்ளானவர்கள் மறுக்கிறார்கள். ஏற்கெனவே நடந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று பெண் மருத்துவர் கூறுகிறார். பெண் மருத்துவர் கூறும் குற்றச்சாட்டுகளில் மீண்டும் விசாரணை நடக்குமா, முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வருமா முதலானவை நம்முன் கேள்விகளாக உள்ளன.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading