• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கன்னியாகுமரியில் தணிந்த மழை: வடியத் தொடங்கிய வெள்ளம்

கன்னியாகுமரியில் தணிந்த மழை: வடியத் தொடங்கிய வெள்ளம்

கன்னியாகுமரி வெள்ளம்

கன்னியாகுமரி வெள்ளம்

கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தண்டவாளங்களில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன.

  • Share this:
    கன்னியாகுமரியில் நான்கு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று தணிந்திருப்பதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், தண்டவாளங்களில் மண் குவியல்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரியில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, பழையாறு, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால், நெல், வாழை, ரப்பர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் உடமைகளை இழந்து தவித்தனர்.

    இந்நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு மழைப் பொழிவு வெகுவாகக் குறைந்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. இரண்டு, மூன்று நாட்களாக வீடுகளிலேயே அடைந்து கிடந்த மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.

    கோதையாற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது. மார்த்தாண்டத்தை அடுத்த மூலக்காவிளை முல்லையாற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் கிருஷ்ணமணி என்பவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 3 நாட்களுக்கு பிறகு மலையாறம் தோட்டம் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    குழித்துறை - தேங்காய் பட்டினம் மற்றும் குழித்துறை - அருமனை சாலைகளில் வெள்ளநீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பார்த்திபபுரம் சாலையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    கனமழையால் தண்டவாளங்களில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே மூன்றாவது நாளாக ரயில் சேவை முடங்கியது. நாகர்கோவில் வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்துடன் திருப்பிவிடப்பட்டன. 20 ரயில்கள் பகுதியளவு இயக்கப்படுகின்றன.

    Must Read : சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு : காற்றின் திசைவேக மாறுபாடு

    நெல், வாழை, ரப்பர் உள்ளிட்ட தோட்டங்களில் ஆள் உயரத்திற்கு தேங்கிய மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது. பயிர் சேதங்களை கணக்கிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கனமழை எதிரொலியாக குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: