கேரள மாநிலம் பாறசாலை அடுத்துள்ள இஞ்சிவிளை, நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற சாக்கன் பாபு ( 49) இவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை கைதியாக உள்ளார் .இந்நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலைய வழக்கு பதிவின் படி கொலை சம்பந்தமான வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனையடுத்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த 2 கேரளா போலீசார் குற்றவாளி பாபுவை பஸ் மூலம் கடந்த 11ஆம் தேதி குளித்துறை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர் .அப்போது குழித்துறை கோர்ட்டில் கொண்டு செல்ல கையில் கிடந்த விலங்கினை கழட்டியுள்ளனர் .
அந்த இடைவெளியில் குற்றவாளி பாபு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பாபுவை துரத்தி சென்றனர் .ஆனால் பாபு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர், மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை .மேலும் கேரள எல்லைப் பகுதி காவல் நிலையங்கள் மற்றும் திருவனந்தபுரம் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது .தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க போலீசார் சல்லடை போட்டுத் தேடி வந்தனர்.
கொலை குற்றவாளி தப்பி ஓடிய விவகாரம் மார்த்தாண்டம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்நிலையில் குற்றவாளி பாபு நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் நேற்றிரவு நாகர்கோவிலில் வைத்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடி பழக்கம் இருந்து வந்த குற்றவாளி நீண்ட காலமாக மது அருந்த முடியாமல் சிறையில் இருந்த நிலையில் நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தி இருந்த இவர் மது அருந்துவதற்கு நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் வேற எந்த நோக்கமும் இல்லை எனவும் போலீசாரிடம் கூறினார்.
Read More : மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ
நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து சென்ற இவர் பாறசாலையில் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் ஒருவரிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வாங்கிய பின் மதுபாட்டில் வாங்கி விட்டு பேருந்தில் நாகர்கோவலில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் சென்று குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தமிழக போலீசார் இவரை கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறை குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து போலீசார் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் குற்றவாளியை கைது செய்தனர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.