மலையாள மக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்று விஷு . இந்த பண்டிகையை புதிய நம்பிக்கையுடன் மலையாள மக்கள் வரவேற்கின்றனர். விவசாயம் செழிக்கவும் மக்கள் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் விஷு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது மலையாள மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளிகளுக்கு விஷு என்பது செழுமை மற்றும் விவசாய செழிப்பின் சின்னம். செழிப்பான எதிர்காலத்தை வரவேற்போம் எனும் நம்பிக்கையுடன் உலக மலையாளிகள் விஷு கொண்டாட்டங்களை தொடங்கினர். இதற்காக கேரளாவின் குருவாயூர், சபரிமலை, அம்பலப்புழா, சோட்டாணிக்கரை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய கோவில்களிலும் விஷுகணி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், கோவிட் பரவல் குறைந்துள்ளதால் இந்த முறை வீட்டிற்கு வெளியே கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை. இந்த பண்டிகைக்காக உருளையில் பழ தானியங்கள் வைத்து விளக்கேற்றி, கொடிமுண்டு, வெள்ளரிக்காய், கனிகொன்னை, வெள்ளி காசுகள் வழங்கி மலையாளிகள் கோலாகலமாக இந்த பண்டிகையை வரவேற்றுள்ளனர்.
இதற்காக அதிகாலை முதலே சுத்தமாக தரிசனம் காண நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விஷுக்கணி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்கள் மேல் சாந்தி தீயன்னூர் கிருஷ்ண சந்திரன் நம்பூதிரியிடம் விஷு கை நீட்டம் பெற்று சென்றனர்.
இதே போல மக்கள் வீடுகளிலும் விஷுக்கணி மற்றும் விஷு கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மூத்தோர்களை வணங்கி சிறுவர்கள் விஷு கைநீட்டம் பெற்றனர். விஷு பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அதிகாலை விஷுக்கணி தரிசனம் நடைபெற்று வருகிறது.
ALSO READ | தமிழ் புத்தாண்டு 2022 | பழமை வாய்ந்த தென்காசி தக்ஷிணாமூர்த்தி கோயிலில் குருப் பெயர்ச்சி விழா ... பக்தர்கள் சுவாமி தரிசனம்
மலையாள மக்களுக்கு கேரள முதல்வர் மற்றும் கவர்னர் ஆகியோர் விஷூ வாழ்த்துகளை தெரிவித்தனர். விஷூ பண்டிகை சமூகத்தையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் என்று முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்தினார். செழிப்பு, அமைதி மற்றும் ஒற்றுமையின் கைநீட்டம் வழங்கி விஷு மக்களுக்கு நன்மை தரட்டும் என்று கவர்னர் வாழ்த்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.