கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த கருங்கல்லால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ந்த சம்பவத்தில் சூர்யா என்ற வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு குருவாயூர் விரைவு ரயில் சென்றது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது வாழோடு பகுதியில் திடீரென ரயிலில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுனர் அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு ரயில் மீது ஏதோ மோதியதாக தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது கருங்கல் 2 துண்டாக கிடந்துள்ளது. இதையடுத்து இது தற்செயலாக நடந்ததா இல்லை யாரேனும் ரயில்வே தண்டவாளத்தில் கருங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திக்கணங்கோடு அருகே உள்ளவாழோடு பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்ற வாலிபர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான் குற்றம் செய்து உள்ளார் என்பது உறுதியானது.
கருங்கல் வைத்த பகுதியின் அருகில் தான் சூர்யா வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கொத்தனார் வேலைக்கு செல்வது விசாரணை தெரிய வந்தது. சூர்யா குடிபோதையில் கல்லை எடுத்து வைத்து உள்ளாரா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சஜயகுமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.