கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புதுப்பெண் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தனுசியா (20). இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையைச் சேர்ந்த செல்வமூர்த்திக்கும் (34) கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது செல்வமூர்த்திக்கு 10 கிராம் செயின், 2 கிராம் மோதிரம், 2 கிராம் கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளும் போட்டுள்ளனர்.
Also Read: அஜித்தின் வலிமை ரிலீஸான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்த திருமணத்தை அடுத்து புது தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள செல்வமூர்த்தி வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவன் மனைவி மற்றும் மாமியார் இருந்துள்ளனர். மதிய உணவிற்கு கோழி இறைச்சி சமைத்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனுசியா தனது அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியே வராத நிலையில் செல்வமூர்த்தி, அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்த போது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தனுசியா உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வடசேரி போலீசாருக்கும், தனுஷியா வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் தனுசியாவின் உடலை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தனுசியாவின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: வில்லங்க சான்று வாங்க வந்த இடத்தில் வில்லங்கம்.. போலி பத்திரப்பதிவை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா
இந்நிலையில், இருவருக்கும் 14 வயது வித்தியாசம் காணப்பட்டுள்ளது. அதேபோன்று திருமணத்திற்கு பின் தொலைபேசியில் தனுசியா பேசிய பின்பு மிகவும் மன உழைச்சலுடன் காணப்படுவதும் இருந்து வந்துள்ளது. கணவன் செல்வமூர்த்தி திருமணத்தின் போது 10 பவுன் நகை அணிவித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் கணவன் மனைவி இடையே பிரச்னை இல்லை எனவும் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்த போது செல்வமூர்த்தியை திருமணம் செய்ய சம்மதமா என கேட்டு, அவரது சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாகவும் செல்வ மூர்த்தியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அவ்வப்போது தொலைபேசியில் பேசும் தனுசியா, அதன்பின் அமைதியாக இருப்பது பல நாட்கள் நடந்துள்ளது. அவரது மனதில் என்ன எண்ணம் இருந்தது என தெரியாத நிலையில், தனுஷியா எடுத்துக்கொண்ட முடிவு குடும்பத்தினரை சோகமடைய செய்துள்ளது. மேலும், புதுப்பெண் ஒரே மாதத்தில் இறந்துள்ளதால் நாகர்கோவில் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. தனுஷியா மொபைல் உட்பட அவருக்கு சம்பந்தபட்ட ஆவணங்கள் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஐ.சரவணன் (நாகர்கோவில்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.