கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கூலித்தொழிலாளியை சரமாரியாக குத்தி கொலை தாய் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் கூலி தொழிலாளி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாய் கடந்த 23-ம் தேதி உயிரிழந்தார். இதில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். அம்மாவை யாரும் கவனிக்காததால் தான் அவர் உயிரிழந்துவிட்டார் என தனது அண்ணன் ராஜன் என்பவரது மனைவி விஜிலாவிடம் கூறியுள்ளார். விஜிலா இதனை தனது கணவரிடம் கூற சுரேஷ் வீட்டாருக்கும், ராஜன் வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் தனது அண்ணனை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜிலா மற்றும் அவரது மகன் அல்டின் இருவரும் சுரேஷ் தாக்கியுள்ளனர். தாக்கியத்தோடு மட்டுமல்லாமல் விஜிலா வீட்டில் இருந்த வெந்நீரை எடுத்து சுரேஷ் மீது ஊற்றியுள்ளார். இதில் சுரேஷ் நிலைத்தடுமாறி உள்ளார்.
ஆத்திரத்தில் இருந்து அல்டின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுரேஷ் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சுரேஷின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் அடைந்தது. வலியால் துடித்த சுரேஷின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். பின்னர் அவர்கள் சுரேஷை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு சுமார் 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறித்த தக்கலை சரக டிஎஸ்பி சுரேஷ் மரணத்துக்கு காரணமாக இருந்த தாய் மகனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - சஜயகுமார் தனஞ்செயன் (கன்னியாகுமரி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.