கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு சவால் விடும் விதமாக சினிமா பட பாணியில் ஜோக்கர் முகமூடி அணிந்து ஏ.டி.எம்., நகைக்கடை உள்ளிட்டவைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவரை 6 மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள், மொபைல் கடைகளில் முகமூடி, தலையில் குல்லா, குடை உள்ளிட்டவை அணிந்து திரைப்பட பாணியில் தொடர் திருட்டு சம்பவங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்து வந்தது. இந்த திருட்டில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் குறித்த எந்த தடயங்களும் போலீசாருக்கு கிடைக்காமல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் பேரில் குளச்சல் சரக துணை கண்காணிப்பாளர் தங்கராமன் கண்காணிப்பில் தனிப்படை போலீசார் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் கொல்லங்கோடு அருகே சுனாமி காலனி பகுதியில் பாழடைந்து கிடந்த ஒரு வீட்டிலிருந்து செல்போன் கடைகளில் இருந்து திருட்டு போன ஒருசில மொபைல் போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருட்டு நடைபெறும் போது பயன்படுத்திய உடைகள் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த நபர்கள் தான் என்ற கோணத்தில், போலீசார் தீவிர கண்காணிப்பை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் மாறி மாறி தங்கி போலீசாருக்கு போக்கு காட்டி வந்தனர். இந்த நிலையில் கொல்லங்கோடு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திருமஞ்சனம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகப்படும்படியான விதத்தில் ஒருநபர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அந்த நபரை பார்த்தபோது ஏ.டி.எம். நகை கடைகள் உள்ளிட்டவற்றில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் போல் தெரிந்ததை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அப்போது சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் நகைகள் இருந்தது தெரியவந்தது.
Read More :
மாணவியிடம் அத்துமீறிய போராசிரியர்.. கண்டுக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் - நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
அப்போது அத்ந நபர் திடீரென தப்பி ஓட முயன்றார். ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர்தான் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் என தெரியவந்தது. மேலும் திருட்டில் கிடைத்த நகைகளை விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் பிடிபட்ட நபரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அந்த நபர் வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஷலால் கஸ்பாஸ் என்ற ஷாலு ( வயது 24) என்றும் கருங்கல், குளச்சல், நித்திரவிளை கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏ.டி.எம். மையங்கள், நகை கடைகள் மற்றும் மொபைல் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது அவரும் தூத்தூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பரான ஜிம்சன் என்ற மிதின் என்பவரும் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
Must Read : கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை ஆங்காங்கே வெட்டி நூதன மோசடி - சேலத்தில் பரபரப்பு
இதனையடுத்து போலீசார் பிடிபட்ட நபரிடம் இருந்து 22 சவரன் தங்க நகை மற்றும் 25 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்கு, பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகி இருக்கும் மற்றொரு குற்றவாளியான ஜிம்சன் என்ற மிதினை தேடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.