கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பெண்ணிடம் காவல் ஆய்வாளர் எனக்கூறி பணம் பறித்து விட்டு அவரது மகளை ஆசைக்கு இணங்க கேட்ட ஊர்க்காவல் படையினரால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கில்டா மேரி என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மது கடை இல்லாததால் தனது வீட்டில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் இரண்டு பேர் கில்டா மேரியின் வீட்டிற்கு சென்று தாங்கள் இருவரும் அருமனை காவல் நிலையை ஆய்வாளர் என்றும் நீ இங்கே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியும் உன்னை கைது செய்ய வேண்டாம் என்றால் எங்களை கவனித்தால் போதும் எனக்கூறி மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.
இதனை ஏமாந்து நம்பிய கில்டா மேரி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்ட இருவரும் கில்டா மேரியின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மதுக்கடைகள் அனைத்தும் திறக்காததால் விற்பனை அதிகமாக நடந்திருக்கும் ஆகையால் தங்களுக்கு கில்டா மேரியின் மகளை விருந்தாக்க வேண்டும் என்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி மிரட்டி உள்ளனர். இதனை கேட்ட கில்டா மேரி அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுகொடுத்த கில்டா மேரி இருவரையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டு ஊர்மக்கள் உதவியை நாடி உள்ளார் அதற்கு ஊர்மக்கள் உதவி புரிய ஒப்புகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தொலைபேசியில் பேசிய இருவரும் மீண்டும் கில்டா மேரியின் வீட்டிற்கு வந்துள்ளனர் அப்போது அங்கு மறைந்திருந்த ஊர்மக்கள் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது பிடிபட்டவர்களில் ஒருவன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி உள்ளான். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் செறுவல்லூர் பகுதியை சேர்ந்த சசீதரன்நாயர், கடுக்கச்சிவிளை பகுதியை சேர்ந்த ரீகன் என்பதும் இவர்கள் இருவரும் ஊர்காவல்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவசர காலங்களில் காவல்துறையுடன் சேர்ந்து பணியாற்றும் போது சில இடங்களை நோட்டமிட்டு பின்பு அந்த பகுதிகளுக்கு சென்று மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிடியில் சிக்கிய சசிதரன் நாயரை காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரீகனை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சஜய குமார் (கன்னியாகுமரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.