• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உனக்கு மாங்கல்ய தோஷம்: உன் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாது- பொய்கூறி பெண்ணிடம் 22 பவுன் நகை கொள்ளையடித்த மந்திரவாதி

உனக்கு மாங்கல்ய தோஷம்: உன் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாது- பொய்கூறி பெண்ணிடம் 22 பவுன் நகை கொள்ளையடித்த மந்திரவாதி

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி பெண் ஒருவர் இருபத்தி இரண்டரை பவுன் தங்க நகைகளை சுருட்டியுள்ளார்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி 34 வயதான சுஜிதா. இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார்.

    அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்றும் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். இதைக் கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைய, தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? என்று சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

    மேலும், தோஷத்துக்கு பரிகாரமாக தான் எதை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜிதா சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்த நகையை கேட்டுள்ளார்.

    மாங்கல்ய தோஷம் என்று கூறியதால் தனது கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று நினைத்த அந்த பெண் முதலில் தன்னிடம் இருந்த நகையை சுஜிதாவிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் பூஜை, வேண்டுதல் என பல காரணங்களை கூறி கடந்த 8 மாதங்களாக சிறிது சிறிதாக இருபத்தி இரண்டரை பவுன் நகைகளை அந்த பெண்ணிடம் இருந்து சுஜிதா அபகரித்துள்ளார்.

    இந்த நிலையில் பெண்ணின் நகையை அவருடைய கணவர் கேட்டுள்ளார். அப்போது தான் நகையை சுஜிதா அபகரித்த விவரம் தெரியவந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுஜிதா போலி மந்திரவாதி என்பது தெரிய வந்தது.  புதன்கிழமை சுஜிதாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இருபத்தி இரண்டரை பவுன் நகைகளை மீட்டனர்.

    மேலும் இவர் என்னென்ன மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: