கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிராத்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் நேற்றும் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Also Read : வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் என்ன செய்தீர்கள்? சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம்கேட்டபோது மதமாற்ற சர்ச்சை வீடியோ தொடர்பாக சம்பத்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை தற்காலி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் உத்தரவிட்டுள்ளா். அரசு ஆசிரியை மதமாற்ற சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.