கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்துத் தர கேட்டு மீனவ பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு கடல்சீற்றம் ஏற்படும் போது கடலின் கரைப்பகுதியில் அமைந்திருக்கும் வீடுகள் அனைத்தும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இடிந்து விழுந்து பலத்த சேதங்களுக்கு ஆளாகும். இதை தடுக்க மீனவ மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நீரோடி முதல் இரையுமன்துறை வரை உள்ள பல்வேறு பகுதிகளில் அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் ஒரு சில தற்போது சேதமடைந்தும் ஒரு சில பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்கபடாமலும் உள்ளன. இந்த நிலையில் தூத்தூர் மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகளை பாதுகாக்க அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தர கடந்த 2 ஆண்டுகளாக மீனவ மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பெண்கள் துறைமுக பகுதிக்கு பாறை கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் துறைசார்ந்த அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனக்கூறி கொளுத்தும் வெயிலில் சாலையின் நடுவே அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.