கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் ரேசன் அரிசி கடத்தல் சம்பந்தமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதிலும் கடத்தல்காரர்கள் பல பிரிவுகளாக பிரிந்து தங்களது கடத்தல் தொழில்களை செய்து வருகின்றனர். இவ்வாறு கடத்தப்படும் ரேசன் அரிசி கடத்தல்காரர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டும் கடத்தல்காரர்கள் அதில் இருக்கும் அதிகாரிகளை சரிகட்டி தங்களது தொழிலை எளிதாக நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடந்து வரும் தொழிலில் அவ்வப்போது ஏற்படும் போட்டி காரணமாக தாக்குதல்கள் நடைபெறுவது உண்டு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு களியக்காவிளை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குளப்புறம் அன்னிக்குளம் பகுதி வழியாக ஒரு தரப்பினர் கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரில் ரேசன் அரிசி மூடைகளை கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட மற்றொரு கடத்தல் குழுவினர் அன்னிக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரண்டு பேரை சரமாரியாக தலை மற்றும் வயிற்று பகுதியில் வெட்டி வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தாக்குதலுக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகள் குறித்து தக்கலை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.