வலிமை படபாணியில் குமரியில் செயின் பறிப்பு.. ரேஸ் பைக்குடன் சிக்கிய கேரள இளைஞர்கள்
வலிமை படபாணியில் குமரியில் செயின் பறிப்பு.. ரேஸ் பைக்குடன் சிக்கிய கேரள இளைஞர்கள்
பைக் ரேஸ் புள்ளிங்கோ கைது
Kanyakumari District | பைக் பைனான்ஸ் கட்டுவதற்காகவும் பைக் ரேஷ் பந்தயத்திற்காகவும் பட்டதாரி புள்ளிங்கோ வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியில் நர்ஸரி கார்டன் ஊழியரின் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிய பைக் ரேஸ் புள்ளிங்கோ கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் மர்ம நபர்கள் கடையில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து தங்க சங்கிலியை அறுத்து கேரளாவிற்கு தப்பி செல்வது தொடர்கதை ஆன நிலையில் கொள்ளையர்களை பிடிக்க எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அழகியமண்டபம் பகுதியில் வைத்து புல்லட் வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு புள்ளிங்கோ வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தக்கலை காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணயில் அவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அபி என்பதும் மற்றொருவர் டிப்ளமோ பட்டதாரியான ஆகாஷ் என்பதும் தெரிய வந்தது. மேலும் பி.டெக் பட்டதாரியான அபி மாலத்தீவில் வேலை பார்த்து சமீபத்தில் சொந்த ஊர் வந்ததும் பின்னர் விலையுயர்ந்த ரேஸ் பைக் ஒன்றை பைனான்ஸ் விலைக்கு வாங்கி தனது நண்பர் ஆகாஷ் மற்றும் சில நண்பர்களுடன் புள்ளிங்கோ ஸ்டைலில் பைக் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர் ரேஸில் பெருந்தொகையை இழந்து ஒரு கட்டத்தில் பந்தையத்தில் ஈடுபட முடியாமல் பைக் பைனான்ஸ் கட்ட முடியாமல் சிக்கி தவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனது ரேஸ் பைக்கை ரெடி கேஷ் ஆக்கி மீண்டும் பைக் ரேசில் ஈடுபட எண்ணிய அபி தனது நண்பர் ஆகாஷ் உடன் கொள்ளையில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். ஆகாஷும் இதற்கு சம்மதிக்கவே கேரளாவில் இருந்து ஆகாஷ் உடன் புல்லட் வாகனத்தில் கடந்த 22-ம் தேதி வெள்ளி அன்று கன்னியாகுமரி வந்துள்ளனர். இருவரும் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் நிறுத்திய போது அந்த பகுதியில் உள்ள நர்சரி கார்டனில் பணியாற்றும் சாந்தா பாய் என்ற மூதாட்டி தனியாக நிற்பதை கவனித்துள்ளனர். அபி உள்ளே சென்று பூச்செடிகளின் விலைகளை கேட்பது போல் அவர் கழுத்தில் கிடந்த 4-சவரன் தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடியுள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வரும் நிலையில் ஒரு வாரம் கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு சங்கிலி அறுப்பு சம்பவத்தை அரங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 4-சவரன் தங்க சங்கிலி மற்றும் புல்லட் பைக்கை பறிமுதல் செய்ததோடு அவர்களை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.பைக் பைனான்ஸ் கட்டுவதற்காகவும் பைக் ரேஷ் பந்தயத்திற்காகவும் பட்டதாரி புள்ளிங்கோ வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.