மதுக்கடைகள் திறப்புக்கு பிறகு கன்னியாகுமரியில் கொலை, அடிதடி வழக்குகள் அதிகரிப்பு

மாதிரிப் படம்

கன்னியாகுமரியில் மதுக்கடைகள் திறப்புக்கு கொலை, அடிதடி வழக்குகள் அதிகரித்துவருகின்றன.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது  ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதில் 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் மது வாங்க வரிசையில் நின்று குடைகளுடன் நின்று வாங்கி சென்ற நிலையும் ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் மது போதை ஆசாமிகளின்  போதை அட்ராசிட்டி வீடியோக்கள் போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை முத்தமிட்டு வாங்கி சென்றதும்,  சூடம் காண்பித்து மகிழ்ச்சியை வெளிபடுத்திய சம்பவங்களும்  அரங்கேறின. இந்நிலையில் மதுக்கடை திறப்பிற்கு பிறகு இரண்டு தினங்களில் குமரி மாவட்டத்தில் கொலை, அடிதடி, விபத்து உள்ளிட்ட புகார்களும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்க முயன்ற வாலிபர் ஒருவர், பைக்கின் சைடு ஸ்டாண்ட்  போடப்பட்டிருப்பதை மறந்து பைக் மீது ஏறி பைக்கை இயக்க பலமுறை முயன்றுள்ளார். பின்னர் பைக் ஒரு பக்கமாக  சாயத்துவங்கியதில் பைக்குடன் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் சுயநினைவின்றி அதே பகுதியில் உயிரழந்துள்ளார்.

இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டாறு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான கோவில் அருகாமையில் இறைச்சி கடை நடத்தி வந்த நபர் மீது மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்த காரணத்தால் நேற்று மது போதையில் அக்கடையின்  உரிமையாளரான முதியவர் ஒருவர் கையில் அரிவாளுடன்  கோவில் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சிகளுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் ஏற்பட்ட தகராறில் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் கணவன் ஐயப்பன் என்ற 24 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் காவல்நிலையங்களில் அடி தடி, குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு என மது போதை ஆசாமிகளால் புகார்கள் அதிகரிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: சரவணன்
Published by:Karthick S
First published: