கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக உள்ள வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கன்னியாகுமரியைப் பொறுத்த வரையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல் இல்லாமல் தேசியக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் அங்கு அதிகம்.
கடந்த தேர்தலிலும் கூட முதலிடத்தை பொன் ராதாகிருஷ்ணனும், இரண்டாம் இடத்தை காங்கிரசை சேர்ந்த வசந்த குமாரும் பெற்றனர்.
தமிழகத்தை ஆண்ட, ஆளும் அதிமுக, திமுக 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்தது.
பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த மாவட்டம் கன்னியாகுமரிதான். சாதி ஓட்டுகளும் இருவருக்கும் சமம்தான். ஆனால், வசந்தகுமாருக்கான ஆதரவு தொடக்கத்திலிருந்தே அதிகப்படியாகவே இருந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.
அப்போது திமுக உடனான கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்துத்தான் களம் கண்டது. இம்முறை திமுக உடனான கூட்டணி இருப்பதால் வசந்தகுமாருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
புயல், மீனவர்கள் பிரச்னை, மத்திய அரசின் மீதான வெறுப்பு, பாஜக எதிர்ப்பலை இவை அனைத்தும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இருந்தாலும், தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் இருப்பதால் இருவருக்கும் இடையே மிக கடுமையாக போட்டி இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வசந்தகுமார், முன்னிலையில் இருந்தார். தற்போது வரை, வசந்தகுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 45513 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.