Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்

மாணவியின் தாயார்

மாணவியின் தாயார்

எனது மகள் எழுதியதாக வெளியான கடிதத்தில் உள்ளது எனது மகளின் கையெழுத்தே இல்லை. அது யாருடைய கையெழுத்து? கள்ளக்குறிச்சி மாணவி தாயார் கேள்வி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
    கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சிறுமி இறப்பு சம்பவத்தில், மாணவியுடன் படித்த 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், அந்த மாணவிகள் யார், அவர்கள்  தனது மகளுடன் படித்தவர்கள் தானா? அல்லது பள்ளி தரப்பில் ஜோடிக்கப்பட்ட மாணவிகளா’ என அடுக்கடுக்காக கேள்விகளை இறந்துபோன சிறுமியின் தாயார் எழுப்பியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்து தனியார் பள்ளியில்12ம் வகுப்பு படித்து வந்த மாணவி , கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ம் தேதி மாணவியின் உடல் அங்குள்ள மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவி  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாணவி  உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்தது. இதனையடுத்து கடந்த  ஜூலை மாதம் 22ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி உடல்  கீதாஞ்சலி, ஜீலியானா ஜெயந்தி, கோகுலநாதன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுவினரால் 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின்  இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்களான குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி, மாணவியின் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் கடந்த 1ம் தேதி ஒப்படைத்தனர். கடந்த 21 நாட்களுக்கும் மேலாக மாணவியின்  இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்களான குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வந்த நிலையில் ஆய்வை முடித்து அதன் அறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (22ம் தேதி) தாக்கல் செய்தனர். ஆய்வு அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணியிடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு நேற்று நேரில் வழங்கியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையை பொறுத்தே மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை அமையும். இதனிடையே மாணவி மரண வழக்கில் முக்கிய திருப்பமாக மாணவியுடன் படித்து வந்த இரண்டு மாணவிகள் தாமாக முன் வந்து விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாலை நேரில் ஆஜராகி நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போது நீதிமன்ற அறைக் கதவுகள் மூடப்பட்டு சுமார் 3 மணி நேரம் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்து கொண்டார். ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள இரண்டு மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் - நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வாதம்!

    இதனிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2வது முறையாக செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு தாக்கல் செய்துள்ள 2 பிரேத பரிசோதனைகள் குறித்த ஆய்வு அறிக்கையையும், பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளையும் தங்களுக்கு வழங்கும்படி மாணவியின் தாய் செல்வி தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி செல்வி.புஷ்பராணி, இது குறித்து உத்தரவினை பிறகு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாய் , எனது மகளுடன் படித்த 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவிகள் யார், அவர்கள் எனது மகளுடன்  படித்தவர்கள் தானா? அல்லது பள்ளி தரப்பில் ஜோடிக்கப்பட்ட மாணவிகளா என்பது எனக்கு தெரியவில்லை. வாக்குமூலம் அளித்த மாணவிகள் யார் என்பதை தனிப்பட்ட முறையில் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிபிசிஐடி போலீசார் நீதியை நிலை நாட்டுவார்கள் என நம்புகிறோம். எனது மகள் எழுதியதாக வெளியான கடிதத்தில் உள்ளது எனது மகளின் கையெழுத்தே இல்லை.

    அது யாருடைய கையெழுத்து என கண்டுபிடித்து சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க வேண்டும். விசாரணையை நீண்ட நாட்களுக்கு இழுத்து கொண்டே செல்லாமல் விரைவாக விசாரணையை முடித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். எனது மகளின் மரணம் தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க பலமுறை முயற்சித்தும் எங்களால் முடியவில்லை. எனவே எனது மகளின் மரணத்திற்கு நீதிக்கேட்டு வரும் வெள்ளிக்கிழமையன்று எனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் இருந்து நடைப்பயணமாக சென்னைக்கு சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். எனது மகள் உயிரிழந்து 45 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் உண்மை வெளி வராமல் மர்மமாகவே உள்ளது. என் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்றார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai High court, Kallakurichi

    அடுத்த செய்தி