மேல கையவச்சு பாரு தம்பி... உடன்பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது - அண்ணாமலைக்கு எச்சரிக்கைவிடுத்த கனிமொழி

மேல கையவச்சு பாரு தம்பி... உடன்பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது - அண்ணாமலைக்கு எச்சரிக்கைவிடுத்த கனிமொழி

பிரச்சாரத்தில் கனிமொழி

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பேச்சுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி இன்று தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார். முதலாவதாக பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே பெரியகுளம் வேட்பாளர் சரவணக்குமாரை ஆதரித்து பரப்புரை செய்த கனிமொழி, பின்னர் தேவாரம் பகுதியில் கம்பம் வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்தும் பேசினார்.         அதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து பழனிசெட்டிபட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ’இங்கு துணை முதல்வர் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. சென்னையில் ஒருநாள்  ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். பின்னர் அம்மா மரணத்தில் மர்மம் இருக்குனு சொல்லி, தர்மயுத்தம் நடத்தினாரு. பிறகு முதலமைச்சர் பழனிசாமி கூப்பிட்டு துணை முதல்வர் கொடுப்பதாக சொன்ன உடன் அதை மறந்துவிட்டார். ஆனால் யார் மறந்தாலும் தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

மக்களவையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் விவசாய சட்ட மசோதாவிற்கு தமிழகத்தில் இருந்து ஆதரித்து வாக்களித்த ஒரே எம்.பி உங்கள் தொகுதி எம்.பி தான். இந்த இரு சட்டத்தையும் ஆதரித்து 3 மாதங்களுக்கு முன் வாக்களித்த அ.தி.மு.க, தற்போது தேர்தல் வந்ததால் எதிர்ப்பதாக கூறி நாடகம் ஆடுகிறார்கள்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, கடந்த 10 வருடத்துல யாருக்காவது வேலை கிடைச்சதா? இல்ல தி.மு.க ஆட்சி அமைந்ததும் தொழிறிற்சாலைகள் உருவாக்கப்படும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும். காலியாக இருக்கக்கூடிய 3,50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தி.மு.க ஆட்சி அமைந்ததும் பெண்கள் டவுன் பஸ்ஸில் யாரும் டிக்கட் எடுக்காமல் இலவசமாக சென்று வரலாம். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், பேரூராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஊதியம் 300 ஆக உயர்த்தப்படும் என்றார். போடி தொகுதியில் எந்த திட்டங்களையும் ஓ.பழனிசாமி கொண்டு வரவில்லை. சங்கராபுரம் அருகே சிட்கோவிற்கு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆட்சி வெறும் அடிக்கல் மட்டும் நாட்டுகிற ஆட்சியாகவே இருக்கிறது. ஒரு செங்கலைக் கூட எடுத்து வைப்பதில்லை. மேலும் போடி பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை செயல்படுத்தவில்லை. இங்கு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி தர வேண்டிய துணை முதலமைச்சர் இருந்த 2 தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார்.

அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்றாரு. அண்ணாமலை என்றால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல. செந்தில் பாலஜிய அடிச்சிருவேனு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிபாரு தம்பி. திமுக  உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம், எங்கே யார், எதை பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். நாவடக்கம் வேண்டும் எனத் தெரிவித்தார். திமுக ஆட்சி வந்ததும் முதியோர் உதவி தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். போடியில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மாம்பழ கூழ் தொழிற்சாலையை கொண்டுவரப்படும். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது இறகு பந்து இன்டோர் ஸ்டோடியம் கொண்டு வந்துள்ளேன். அது எல்லாம் மோடிக்கு பிடிக்காது. இப்ப அந்த நிதியையும் நிறுத்தி விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஆண்டிபட்டியில் திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து எம்.ஜி.ஆர் சிலை அருகே கனிமொழி பரப்புரை செய்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: