காவல்துறை தாக்கி வியாபாரி உயிரிழந்த விவகாரம் - கனிமொழி, டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

முருகேசனை போலீஸார் தாக்கும் காட்சிகள்

சேலத்தில் காவல்துறையினர் தாக்கி வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் கனிமொழி, டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை,உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.

  அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையில் இருந்த இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவரை பிரம்பால் தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து முருகேசனை போலீசார் பிரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

  இந்த நிலையில் போலீசார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.எஸ்.ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்து மாவட்டக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்த விவகாரம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

  காவல்துறையின் செயலுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது தி.மு.கவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறை போக்கைக் கடைபிடிப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மக்களிடம் வன்முறையைக் கையாளாமல் நடந்து கொள்வதற்கு தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: