திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் - கனிமொழி

திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் - கனிமொழி

கனிமொழி

தமிழக மக்கள் மாற்றத்தையும் திமுக ஆட்சிக்கு வருவதையும்  ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்று கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கனிமொழி கூறினார். 

 • Share this:
  தமிழக மக்கள் மாற்றத்தையும் திமுக ஆட்சிக்கு வருவதையும்  ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்று கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கனிமொழி கூறினார்.

  கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கோ.ஐயப்பன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருப்பாதிரிபுலியூர் தேரடி வீதியில் புதன்கிழமை மாலையில் பரப்புரையில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் பேசுகையில், “தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழகம் மீட்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வரும். மக்களைக் காணும் போது இது தெளிவாகத் தெரிகிறது. இதனை முதல்வரும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால் தான் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி சாதனைகளைப் பற்றி குறிப்பிடாமல் தோல்வி பயத்தில் சபிக்கத் துவங்கி விட்டார்.

  பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை தில்லியில் அடகு வைத்து விட்டார்கள். வேளாண் சட்டம், சிஏஏ சட்டங்களை ஆதரித்து வாக்களித்து விட்டு இப்போது எதிர்ப்பதாக அதிமுக கூறுவது சந்தர்ப்பவாதம். அதன் அடிப்படையிலேயே சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், முதல்வர் குறித்து கீழ்தரமாக விமர்சித்து விட்டு இப்போது கூட்டணி அமைத்துள்ளார்.

  தமிழகத்தில் எல்லாவற்றிலும் ஊழல். 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.5 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டதாக கூறப்பட்டாலும், யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. 23 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் நிரந்தர வெள்ள வடிகால் பணிக்கு, ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், திருவந்திபுரம்-தேவனாம்பட்டினம் வரையில் கெடிலம் கரையை பலப்படுத்த ரூ.22 கோடி, 52 கி.மீ கடற்கரையில் கடல் அரிப்பினைத் தடுக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் முறைகேடு நடந்துள்ளது.

  கொரோனா காலத்தில் முகக்கவசம், மருந்து, துடைப்பம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. கடலூர் துறைமுகம் விரிவாக்கத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டும் பணிகள் நடக்கவில்லை. கலைஞர் ஆட்சியில் தொழில் முதலீடுகளை ஈர்பதில் 3 ஆவது மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது 14 ஆவது இடத்திற்குச் சென்று விட்டது. மழை வெள்ளம் மற்றும் பல்வேறு புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு கேட்ட நிதியில் மிகக்குறைந்த தொகை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் தேவையான நிதியைப் பெற முடியுமென முதல்வர் கூறிவருகிறார்.

  மின்வாரியம், வங்கிகளில் இந்தி பேசுவோர் பணிக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தொழிற்சாலைகளில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு மீண்டும் செயல் படுத்துவதோடு, இளைஞர்கள் சுயஉதவிக்குழு செயல் படுத்தப்படும். கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவோம். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை கட்டி திறப்போம்” இவ்வாறு கனிமொழி கூறினார்.

  - பிரேம் ஆனந்த்
  Published by:Suresh V
  First published: