முருகன் கோவில்களில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா

தமிழத்தில் உள்ள அறுபடை வீடுகள் உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியுள்ளது.

Web Desk | news18
Updated: November 8, 2018, 9:55 PM IST
முருகன் கோவில்களில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா
வள்ளி, தெய்வயானையுடன் முருகப்பெருமான்
Web Desk | news18
Updated: November 8, 2018, 9:55 PM IST
திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட தலங்களிலுள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து, பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

கந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழா ஆகும். ஐப்பசி மாதம், சுக்கிலபட்ச பிரதமை முதல், சஷ்டி வரை உள்ள 6 நாட்களும் கந்தசஷ்டி காலமாகும். இந்த 6 நாட்களிலும் பக்தர்கள் விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், தமிழத்தில் உள்ள அறுபடை வீடுகள் உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆறுபடை வீடுகளின் 2- வது படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, பிற்பகலில் தங்கச் சப்பரத்தில் சாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, வரும் 13-ம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறவுள்ளது.

இதேபோன்று, 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில், காப்புக்கட்டுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது விரதத்தை ஆரம்பித்தனர்.

மேலும், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய சிறப்பு பூஜையில் வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோவிலில் தீபாவளிக்குப் பின் கந்தசஷ்டி விழா, 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து, சந்தன காப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சஷ்டி விரதத்தை ஏராளமானோர் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, முருகனுக்கு சந்தன காப்பு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மேலும், தங்களது விருப்பத்திற்கேற்ப 3 நாள் மற்றும் 6 நாள் விரதங்களைத் தொடங்கினர்.
Loading...
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில்,   கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி தொடங்கியது. காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Also watch

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்