காஞ்சிபுரம் கோனேரிக் குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வி - சிவமூர்த்தி தம்பதி. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளனர். நீண்ட காலமாக சீட்டு நடத்தியதால் நம்பிக்கைக்குரியவராக தமிழ்ச்செல்வி இருந்து வந்துள்ளார். அதனால், இந்திரா நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த முறை நடத்திய சீட்டு ஏலத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்ச்செல்வி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தனது கணவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சைக்குப் பணம் தேவை என வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் கடனாகவும் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 17வது மாத ஏலத்திற்காக தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் சென்றபோது வீடு பூட்டிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்ச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினரை செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
Also read: மதுரை: அரிவாளைக் காட்டி பணம் பறித்ததாக பாமக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், திங்கட்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவுலகத்திலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் தமிழ்ச்செல்வி மீது புகாரளித்துள்ளனர். மேலும், மத்திய பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரிடமும் இதுகுறித்து புகாரளித்துள்ளனர். தலைமறைவான தமிழ்ச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்