108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருளி பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடவாவி கிணறு உற்சவம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி கட்டுப்பாடுகள் தளர்வடைந்தை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நடவாவி உற்சவம் நடைபெற்றது.
நேற்று சித்ரா பௌர்ணமி நடவாவி கிணறு உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து கிளம்பி ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி,கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
சஞ்சீவிராயர் திருக்கோயிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து,பச்சை, அரக்குகரை, வெண்பட்டு உடுத்தி திருவாபரணங்கள்,பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்து பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது.
பின்னர் நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து,மேலேறி வந்த வரதராஜ பெருமாளை காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
நடவாவி கிணற்றில் இருந்து புறப்பட்டு வரதர் பெருமாள் பாலாற்றின் கரையில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னேறிய பொழுது இரு பிரிவினரும் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு பிரிவினருக்கும் சண்டை முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 2 ஆண்டுகள் கழித்து பாலாற்றில் வரதர் பெருமாள் இறங்கும் நிகழ்வை காண வந்த 1000க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முகசுள்ளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உற்சவத்தின் போது தோத்திரம் பாட தென்கலை பிரிவினருக்கும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த கோர்ட் உத்தரவை மீறி சில வடகலை பிரிவினர் சண்டை போடுகின்றனர் என கூறப்படுகிறது. இதனை இத்திருக்கோவில் மணியக்காரர் பார்த்து ஏதும் பேசாமல் வடகலை பிரிவினர்களுக்கு சாதகமாகவே பேசுகிறார் கோர்ட்டு உத்தரவை மீறி நடக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : சந்திரசேகர் ராமச்சந்திரன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.